Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேட்டூரில் முதல்வர் விஜயின் ரோட் ஷோவில் வாகனத்தில் ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்ததால் பரபரப்பு!

மேட்டூரில் முதலமைச்சர் விஜய் ரோட் ஷோ மேற்கொண்ட நிலையில், அவரது வாகனத்தில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் சாலையில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அணை 82 நாட்கள் தாமதமாக இன்று பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. இதற்கான திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் நோக்கிப் புறப்பட்டார்.

காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் அணை வழியாக மேட்டூர் நோக்கி அவரது கான்வாய் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் அருகே முதலமைச்சரின் வாகனம் வந்தபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இளைஞர் ஒருவர் ஆர்வ மிகுதியால் கான்வாய் வாகனத்திற்கு முன்பாக குதித்து, முதலமைச்சரின் வாகனத்தில் ஏற முயன்றார்.

அப்போது நிலைதடுமாறிய அவர் வாகனத்திலிருந்து தவறி சாலையில் கீழே விழுந்தார். உடனடியாக பாதுகாப்புப் படையினர் அவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொப்பூர் முதல் மேட்டூர் வரையிலான சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலும் முதலமைச்சரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

குறிப்பாக மேட்டூர் நகரில் முதலமைச்சர் வரும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டூர் நோக்கி வந்த வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மேட்டூர் அணையின் முகப்புப் பகுதியில் மட்டும் தற்போது கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேட்டூர் அணைக்குள் செல்ல ஏற்கனவே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அணையின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டனர்.