சென்னை மெட்ரோ இரயில் முதல்கட்ட வழித்தடங்களை மேம்படுத்த புதிய ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ‘கட்டம்-1 வழித்தடங்களின் கட்டமைப்புக் கொள்ளளவை மேம்படுத்தும் பணிக்கான’ திட்ட மேலாண்மை நிறுவனத்தை (PMC - Project Management Company) தேர்ந்தெடுக்கும் ஆலோசனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் AECOM India Private Limited மற்றும் NIPPON KOEI India Private Limited ஆகிய கூட்டு நிறுவனங்களுக்கு வரிகள் உட்பட மொத்தம் ரூ.35.97 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) அவர்களும், AECOM நிறுவனத்தின் சார்பில் மண்டல இயக்குநர் சுனில் குமார் ரெட்டி காசா மற்றும் NIPPON KOEI நிறுவனத்தின் சார்பில் இணை இயக்குநர் சதீஷ் லால் சுனேஜா ஆகியோரும் இந்த ஆலோசனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்; இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கே. மணி வெங்கட குமார், எஸ். ராமசுப்பு, கூடுதல் பொது மேலாளர் சி. பாலமுருகன், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், AECOM மற்றும் NIPPON KOEI நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ இரயில்களில் தினமும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டம்-1 வழித்தடங்களில் மெட்ரோ இரயில்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது; பயணிகள் சேவை எந்தவித தடங்கலும் இன்றி, மிகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் தொடர்வதை உறுதி செய்தவாறே இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ், கட்டம்-1 வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான கட்டிடக் கலை, இரயில் பாதைகள், மின்சார மற்றும் இயந்திரவியல் பணிகளுக்கான விரிவான திட்ட வரைபடங்களைத் தயாரித்தல், ஒப்பந்தப் புள்ளிகளை உருவாக்குதல் மற்றும் கட்டுமானப் பணிகளை நேரில் கண்காணித்து நிர்வகித்தல் போன்ற அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் மேற்பார்வைப் பணிகளையும் இந்த ஆலோசனை நிறுவனம் முழுமையாக மேற்கொள்ளும்.
இத்திட்டத்தில் திட்ட மேலாண்மை நிறுவனமாகச் (PMC) செயல்படும் ‘AECOM மற்றும் NIPPON KOEI’ கூட்டு நிறுவனம், பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி தடையின்றி நடப்பதை உறுதிசெய்ய ஒட்டுமொத்த திட்டமிடல், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்தல், பணிகளைக் கண்காணித்தல் மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்புகளையும் முதன்மையாக ஏற்று நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.