சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, ஆவடி - பட்டாபிராம் வரை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான 3 மெட்ரோ வழித்தடங்கள் புதிதாக அமைக்கப்படும்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான எல்லை கடந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.
* கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், தேனி, திருப்பூர், திருநெல்வேலி. தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு மொத்தம் ரூ.1,762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் வளர்க்கப்படும்.
* காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி நதிகளின் தூய்மையை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
