மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும்: நிர்வாகத்திடம் கோரிக்கை மனு
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கு வந்தே பாரத் மற்றும் பல்வேறு விரைவு ரயில்கள் காலை 5 மணிக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க மாநகரப் பேருந்து மற்றும் மின்சார ரயில்கள் போதுமானதாக இல்லை. இதனால் சொந்த வாகனம் அல்லது கார் டாக்ஸி, வாடகை ஆட்டோ போன்ற வாகனங்களில் பொதுமக்கள் பயணித்து ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமத்தைப் போக்க விம்கோ நகர் மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் இயக்கப்பட வேண்டும் என்று திருவொற்றியூர் நல சங்கத்தின் நிர்வாகிகள் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதற்கான கோரிக்கை மனு மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.