அர்ஜென்டினா: அர்ஜென்டினா அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். தனது இருபதாண்டு கால சர்வதேச கால்பந்து பயணத்திற்கு 39வது வயதில் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 6 உலகக் கோப்பை களில் பங்கேற்றுள்ள மெஸ்ஸி, கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வெல்ல அர்ஜென்டினா அணிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். சமீபத்தில் நிறைவடைந்த 2026 உலகக் கோப்பையின்போது அர்ஜென்டினா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
(இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது). கால்பந்து உலகில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மெஸ்ஸியின் இந்த ஓய்வு அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேஜர் லீக் சாக்கரில் ‘இன்டர் மியாமி’ அணிக்காக கிளப் அளவில் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் வலிக்கக்கூடிய முடிவு
அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்டுள்ள செய்தியில், ‘இது எனக்கு மிகவும் வலிக்கக்கூடிய முடிவு. இப்போதும் கூட ஆழமாக வலிக்கிறது. ஆனாலும், இதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அர்ஜென்டினா அணியின் ஜெர்சிக்காகவும், கால்பந்து மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும், அர்ஜென்டினா மக்களுக்கு பெருமை சேர்க்கவும் நான் எப்போதும் போராடினேன். களத்தில் எனது முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினேன்’ என தெரிவித்துள்ளார்.



