சூப், கபாப், ஸ்டார்டர்ஸ், பிரியாணி மொத்தமாக 220 வெரைட்டி!
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து இறங்கி இடது பக்கமாக திரும்பினால் ரயில் நிலையம் செல்லும் சாலை வரும். அந்தச் சாலை செல்வதற்கு முன்பாகவே இருக்கிறது ‘கரீம்ஸ் பிரியாணி பாரடைஸ்’ என்கிற உணவகம். சிக்கன், மட்டன், கபாப், பிரியாணி, பார்பிக்யூ, சவர்மா, கிரில், சைனீஸ் ஃபுட்ஸ் என பல வகையான வெரைட்டி உணவுகளை கொடுத்துவரும் இந்த உணவகம் அந்தப் பகுதியின் ஃபுட் ஸ்பாட் ஆக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த உணவகம் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. அந்தவகையில், சாப்பிடுவதற்கு என்ன கேட்டாலும் இல்லை எனும் சொல்லும் அளவிற்கு மெனு கார்டில் வெரைட்டிகள் நிறைய இருக்கின்றன.எங்கு சமையல் ஃபேமஸாக இருக்கிறதோ அங்குதான் சாப்பிடுறவங்களும் அதிகமா இருப்பாங்க என பேசத் தொடங்கினார் இந்த உணவகத்தின் உரிமையாளர் ஷிகாம். எங்களுக்கு பூர்வீகம் காரைக்குடிதான். காரைக்குடி என்றாலே செட்டிநாடுதான் நியாபகம் வரும். அந்தளவிற்கு உணவில் இருந்து உபசரிப்பு வரை அனைத்துமே எங்க ஊருல ஸ்பெஷலா இருக்கும். எப்போதும் ஏதாவது வீட்ல சமைச்சுக்கிட்டே இருப்பாங்க. அதனாலயே சமையல் மேல அதிக இஷ்டம்.
சமைத்து அனைவருக்கும் கொடுப்பது, விதவிதமாக சாப்பிடுவது என எல்லாத்திலையும் சின்ன வயசில் இருந்தே ஆர்வம். பெருநாள், விசேஷ நாட்கள் என எந்த நல்ல நாள் வந்தாலும் எங்களுக்குச் சமையல்தான் கொண்டாட்டம். எங்க குடும்பத்தில அனைவருமே ஃபுட் லவ்வர்ஸ்தான். அதனால, ஒரு உணவை சமைக்கும்போதே ஸ்பெஷலாதான் சமைப்பாங்க. அதுமட்டுமில்லாம புதுசு புதுசா ஏதாவது சமைத்தபடி இருப்பாங்க என மகிழ்ச்சியோடு கூறிய ஷிகாம் உணவகம் தொடங்கிய கதையையும் பகிர்ந்து கொண்டார்.சொந்த ஊர் காரைக்குடியாக இருந்தாலும் சென்னை வந்து ரொம்ப வருசம் ஆச்சு. சென்னையில்தான் கல்லூரி படிப்பு முடிச்சேன். வேறு தொழில் செய்தாலும்கூட சின்ன வயசில் இருந்தே எனக்கு ஃபுட் பிஸ்னஸ் மேல ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும்போது இந்த பிஸ்னஸ தொடங்கலாம்ன்னு இருந்தேன். ரம்ஜான், பக்ரீத் போன்ற விசேஷ நாட்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் வீட்டில் இருந்தபடியே பிரியாணி செய்து கொடுப்போம். அந்தமாதிரி 200 பிரியாணி வரை செய்து கொடுத்திருக்கோம். நாங்க கொடுத்த பிரியாணிய சாப்பிட்டவங்க எல்லாருக்குமே எங்க பிரியாணி ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. புது வகையான சுவையில் எங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. அப்பதான் எனக்கு ஒரு யோசனை வந்தது. பேசாம இந்த பிரியாணிய மெயின் ஆக வைத்து ஒரு ஹோட்டல் தொடங்கினா என்னன்னு யோசிச்சேன்.
அதன் பயனாகத்தான் இப்ப இந்த உணவகத்த நடத்திட்டு வரேன்.ஹோட்டல் தொடங்கலாம்ன்னு முடிவெடுத்ததும் முதலில் நுங்கம்பாக்கத்தில் சிறியதாக ஒரு உணவகம் தொடங்கி பிரியாணி, சவர்மா, பார்பிக்யூ மட்டும் கொடுத்து வந்தேன். அந்த உணவகம் நல்ல படியாக செயல்பட்டு கொண்டு இருந்தது. சென்னைல அப்போ வந்த வெள்ளத்தில் அந்த உணவகம் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு போயிடுச்சு. அதன்பின், கொஞ்சநாள் உணவகம் ஏதும் நடத்தாமல் வெளிநாட்டுக்கு வேலை விஷயமா சென்றேன். ஊருக்குத் திரும்பி வந்ததும் திரும்பவும் ஃபுட் பிஸ்னஸ நடத்தணும்னு ஆர்வம் வந்துச்சு. அதன் பிறகுதான் இப்ப இருக்கிற இந்த ஹோட்டலை ஆரம்பிச்சேன். நான் இந்த உணவகத்தை ஆரம்பிக்கும்போது கோடம்பாக்கத்துல பெருசா எந்த பிரியாணிக்கடையும் இல்ல. அதனால் மக்கள் எங்களோட கடைக்கு வர ஆரம்பிச்சாங்க. எங்க கடை பிரியாணி அனைவருக்கும் பிடிச்சுப்போகவே, இப்பவரை கோடம்பாக்கம்ல பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால் எங்க கடைக்குத்தான் வாராங்க. அந்தளவிற்கு மக்களுக்கு எங்க கடை பிரியாணி பிடிச்சிடுச்சு.பிரியாணியில் மட்டும் மூன்று வகையான பிரியாணி இருக்கிறது. சிக்கன், மட்டன், இறால் பிரியாணி இருக்கிறது. ஹைதராபாத் பிரியாணியும் இருக்கிறது. இதுபோக சிக்கன் 65, தந்தூரி, கிரில் என இன்னும் பல வகைகளில் பிரியாணி இருக்கிறது. இவை அனைத்துமே பக்கெட் பிரியாணியாகவும் கொடுத்து வருகிறோம்.
பிரியாணி காம்போக்களும் இருக்கிறது. கிரில், பார்பிக்யூஸ் இருக்கிறது. சைனீஸ் வகை உணவுகளைப் பொறுத்தவரை அனைத்துமே இருக்கிறது எனலாம். வெஜ் அண்ட் நான்வெஜ்ஜில் ஃப்ரைடு ரைஸ் இருக்கிறது. நான் ரொட்டி மற்றும் அதற்கு சைடிஷ் ஆக வெஜ் மற்றும் நான்வெஜ் கிரேவிகள் இருக்கின்றது. நமது கடையில் பிரியாணிக்கு அடுத்தபடியாக சவர்மா ரொம்ப ஃபேமஸ். சவர்மாவை சாப்பிடுவதற்கு மட்டுமே மாலை நேரத்தில் தனிக் கூட்டமே வருகிறது. சிக்கன், மெக்ஸிகன், பெரிபெரி, ஸ்பெஷல் சவர்மா என பல வகையில் சவர்மா இருக்கிறது. இப்போது ரொம்ப ஸ்பெஷலாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பானிபூரி சவர்மா கொடுத்து வருகிறோம். இதுபோக, ஸ்டார்டர்ஸில் மட்டும் பல வெரைட்டிகள் இருக்கிறது. சிக்கன், மட்டன், கடல் உணவுகள் என அனைத்திலும் ஸ்டார்டர்ஸ் இருக்கின்றது. மலபார் ஸ்டைல் பரோட்டா இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், எங்கள் உணவகத்தில் இந்தியன், சைனீஸ், அரேபியன், வெஜ், நான்வெஜ் என மொத்தமாக 220 வெரைட்டிகளில் உணவுகள் இருக்கின்றன. இந்த வெரைட்டி உணவுகளை குவாலிட்டி அடிப்படையில் பிரித்தால் 400க்கும் மேல் உணவுகள் இருக்கும்.
சூப்பில் மட்டும் 25 வகை இருக்கிறது. ஸ்டார்டர்ஸில் 40 வகை இருக்கிறது. தந்தூரி, கபாப் போன்ற டிஷ்ஷில் 20 வெரைட்டி இருக்கிறது. பார்பிக்யூவில் மட்டும் 5 வகைகள் இருக்கிறது. வெரைட்டியான உணவுகளை ஒரே இடத்தில் கொடுத்து வருவதால் அனைத்து தரப்பின மக்களும் சாப்பிட வருகிறார்கள். எங்கள் உணவகத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் பிரியாணி, சவர்மா மட்டும்தான் கொடுத்து வந்தேன். கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் அரேபியன், சைனீஸ் என ஒவ்வொரு உணவாக விரும்பிக்கேட்க அவர்களுக்காக சமைக்க ஆரம்பித்தோம். அதன்பின் அந்த வெரைட்டிகள் அனைத்தும் ரெகுலராக கொடுக்க ஆரம்பித்து இப்போது கடையில் இவ்வளவு வெரைட்டிகள் வந்து விட்டது. சிக்கனைத் தொடர்ந்து மட்டன் உணவுகளுமே இங்கு ஃபேமஸ். ஹைதராபாத் ஸ்பெஷல் மட்டன் கிரேவி, மட்டன் செட்டிநாடு, மட்டன் மசாலா, கடாய் மட்டன் என கொடுத்து வருகிறோம். அதேபோல், இறாலிலும் பல வெரைட்டி கொடுத்து வருகிறோம். மீல்ஸைத் தவிர வேறு அனைத்து வகையான உணவுகளுமே இங்கு இருக்கிறது. உணவில் சுவை எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவு ஆரோக்கியம் முக்கியம். எனது உணவகத்தில் ஆரோக்கியம்தான் பிரதானம். அதனால், ஆரோக்கியத்தில் மட்டும் எந்தவிதமான காம்ப்ரமைஸும் இருக்காது. அந்த வகையில் இந்த உணவகம் நடத்துவது மிகவும் பிடித்தபடி இருக்கிறது என மகிழ்ச்சியோடு பேசினார் ஷிகாம்.
- ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்


