Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா!! ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்...

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.

இதை குறித்து பொதுமக்கள் கூறியுள்ளது "எல்லா மக்களும் வந்து மகிழ்ச்சியாக மீன் பிடித்துச் சென்றிருக்காங்க. கட்லா, விரால், ஜிலேபி உள்ளிட்ட ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நல்ல மீன்கள் கிடைத்தது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகை மீன் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விடுகிறோம். அவை நன்றாக வளர்ந்த பிறகு, பொதுமக்கள் பிடிப்பதற்காக கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைத்து இந்த திருவிழாவை நடத்துகிறோம். இன்று அனைத்து வகையான மீன்களும் கிடைத்தன. சிலருக்கு சிறிய மீன்களும், சிலருக்கு பெரிய மீன்களும் கிடைத்தன."

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வடக்கு வலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரம்பைக் கண்மாயில், பாரம்பரிய மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட நாட்டு வகை மீன்களைப் பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

மேலூர் அருகே உள்ள வடக்கு வலைப்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கரம்பைக் கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் கண்மாயின் நீர் வற்றிய பிறகு, இங்கு பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இன்று மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக கிராம நிர்வாகம் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கருகூலப்பட்டி, தனியாமங்கலம், ஜெயகொண்டநிலை, கீழையூர், கீழவளவு, சிங்கம்புணரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கண்மாய்க் கரையில் காத்திருந்தனர்.

பின்னர், கிராமப் பெரியவர்கள் கோவிலில் வழிபாடு நடத்தி, மீன்பிடிக்க அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி கட்லா, ஊத்தா, கூடை உள்ளிட்ட பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தொடங்கினர்.

சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவருக்கும் சுமார் 2 முதல் 5 கிலோ வரை கட்லா, ரோகு, ஜிலேபி, பாப்லெட், அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

இதுபோன்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாக்கள் நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.