மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது: தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு எதிராகவும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஒரிஜினல் சூட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,‘‘மேகதாது அணை கட்டுவது காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது. அணை கட்டினால் தமிழ் நாட்டுக்கு கிடைக்கும் நீர் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்க அதிகாரம் கிடையாது. குறிப்பாக ஒன்றிய நீர் ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க எந்த அனுமதியும் வழங்க இயலாது. இதன் மீது முடிவு எடுக்க வேண்டியது நடுவர் மன்றம் தான். இந்த பிரச்னைகளுக்கு உச்ச நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
அதேப்போன்று ஒன்றிய அரசிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதையும் இந்த விவகாரத்தில் ஏற்க முடியாது. குறிப்பாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வரும் உபரி நீர் காவிரியில் மேகதாது போன்ற வேறு ஒரு புதிய அணை கட்டுவதால் தடைபடும். குறிப்பாக 80 டி.எம்.சி நீர் தடைபடும். கர்நாடகா அரசின் முக்கிய நோக்கமே இதுவாக தான் இருக்கிறது. ஏற்கனவே காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. அதனால் புதிய அணை கட்ட தேவை இல்லை.
மேலும் உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கூட பல தருணங்களில் காவிரியில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம். கடந்த 50 வருடங்களாக கர்நாடகாவுடன் காவிரிக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த அணை கட்டப்பட்டால் நிச்சயம் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது.
மேகதாது அணையை கட்டுவதற்காகத்தான் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே அதற்கு தடை விதிக்க வேண்டும் .மேலும் அங்கு அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையான பாதிக்கப்படுவார்கள். அதேப்போன்று லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேப்போன்று புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் மேகதாது அணைக்கு எதிரான வாதங்களை முன்வைத்தனர். அப்போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” மேகதாதுவில் அணை கட்ட நாங்கள் அனுமதி கேட்கவில்லை. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கதான் அனுமதி வழங்க கோரிக்கை வைக்கிறோம். இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்ற கர்நாடகா அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. இருப்பினும் அதன் மீது ஒன்றிய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்.
ஒன்றிய நீர்வள ஆணையம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நதிநீர் சம்பந்தமான அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப்படும். இருப்பினும் இந்த விவகாரத்தில் மேகதாது அணை தொடர்பாக திட்ட வரையறை தயாரிக்க அனுமதி கோரிவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அச்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது ஆகும். ஆனால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் காவிரி நதிநீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ, அதை கர்நாடக அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் இறுதி முடிவை மேற்கொள்ளும் முன்னதாக கண்டிப்பாக தமிழ்நாடு அரசிடம் ஆலோசித்து அவர்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மேகதாது அணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
* அணை கட்ட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை: வழக்கறிஞர் வில்சன் பேட்டி
மேகதாது அணை விவகாரம் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2018ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான் மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்தது. மேகதாது விவகாரத்தில் அணை அல்லது திட்ட வரைவுக்கோ உச்சநீதிமன்றம் எந்த வகையிலும் அனுமதி அளிக்கவில்லை.
மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து முறையிடும்போது, மேகதாது விவகாரம் அங்கேயே முடிந்துவிடும். நிபுணர் குழுவினர் முன்பாக தமிழ்நாடு தனது எதிர்ப்பு நிராகரிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக எந்த அமைப்பும் முடிவுகளை எடுக்க முடியாது. இதனால் தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவால் அரசியல் ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.
