புதுடெல்லி: மேகதாது அணைக்கு எதிரான வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 3 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று கோரியும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குத் திட்டங்களை செயல்படுத்தவும் மதிப்பிடவும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் கூடுதலாக சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆவணங்களை தாக்கல் செய்ய 3 வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.



