Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு: உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தல்

பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 26வது உச்சி மாநாடு கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. 2 நாள் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் இன்று நடக்க உள்ளது. இதையொட்டி, மாநாட்டின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் உரப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும், ரஷ்யா-உக்ரைன் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்தோம். இந்தியா அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது, தொடர்ந்து ஆதரிக்கும். போரின் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தைப் பின்னோக்கி இழுக்கிறது.

அதே சமயம் அமைதியை நோக்கிய ஒவ்வொரு நடவடிக்கையும் மனிதகுலத்திற்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. நாம் முடிவில்லாத போரிலிருந்து விலகி, போரின் முடிவை நோக்கி நகர வேண்டும். இது மனிதகுலத்தின் நலனுக்கு மிக முக்கியமானது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் விரைவில் அமைதியான தீர்வு காண்பதே மனிதகுலத்தின் கோரிக்கை. இதுவே இந்தியாவின் செய்தியும் கூட. காந்தி மற்றும் புத்தரின் பூமி ஒரே ஒரு செய்தியைத்தான் முன்வைக்கிறது. அது அமைதிப் பாதை’’ என்றார்.

இந்தியா-ரஷ்யா உறவு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடுகையில், ‘‘நமது ஒத்துழைப்பு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுவதும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக நாம் இணைந்து பணியாற்றுவதும் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. தேச நலனுக்கு முதன்மையான முன்னுரிமை அளிப்பதே நமது கூட்டு அணுகுமுறை. எதிர்காலத்திலும் இதுவே நமது வழிகாட்டும் கொள்கையாக தொடரும்’’ என்றார். ரஷ்யா-இந்தியா உறவு, சிறப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த உத்திசார் கூட்டாண்மையின் அடிப்படையில் மேம்பட்டுள்ளதாக அதிபர் புடின் குறிப்பிட்டார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபர் புடின் அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

ஈரானுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த விருப்பம்

முன்னதாக பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனை சந்தித்து பேசினார். அப்போது, ஈரானுடனான வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் இந்தியா விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மேற்கு ஆசியா போரை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்க்குமாறும் வலியுறுத்தினார். இப்போரால் பிராத்தியத்தில் நிலவும் அமைதியின்மை குறித்து கவலை தெரிவித்த மோடி, நீடித்த அமைதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதி அளித்தார்.

கடல்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைப் பாதுகாக்க அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் உட்பட பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று கூறியதாக வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போரின் போது ஈரான் மீதான இந்தியாவின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கு ஈரான் அதிபர் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.