Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டம்: டெல்லியில் வரும் 24ம் தேதி நடக்கிறது

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய அளவிலான மாநாட்டை டெல்லியில் வரும் 24ம் தேதி நடத்த உள்ளது. இந்த கூட்டம் கடைசியாக 1999ம் ஆண்டு நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்திய தேர்தல் ஆணையம் மாநில ஆணையர்களுடன் இத்தகைய ஆலோசனையை நடத்துகிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை வகிக்கிறார். தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி மற்றும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தின் நோக்கம் இந்திய தேர்தல் ஆணையம் (நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தல்கள்) மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் (உள்ளாட்சி தேர்தல்கள்) ஆகியவற்றுக்கு இடையே ஒருமித்த செயல்பாட்டை கொண்டு வருவது, தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்துவது, சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை நீக்கி அவற்றை ஒருங்கிணைப்பது மற்றும் வாக்காளர் தகுதி மற்றும் அது தொடர்பான சட்ட ரீதியான நடைமுறைகளில் நாடு முழுவதும் ஒரு சீரான தன்மையை கொண்டு வருதல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படும்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் அனைத்து டிஜிட்டல் தளங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். பொதுவாக, மாநில தேர்தல் ஆணையங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. அவை பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களை தன்னிச்சையாக நடத்தும். ஆனால், இப்போது ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியல் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம், தேர்தல் செலவுகளை குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இக்கூட்டம் வழிவகை செய்யும் என தெரிகிறது.