அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் அமைச்சர் ஆனந்துடன் திடீர் சந்திப்பு: தலைமை செயலகத்தில் பரபரப்பு
சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் திடீரென சந்தித்து பேசியதால் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் வாசித்து முடிந்த உடன் கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆன எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் சட்டப் பேரவை வளாகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்து பேசினர். பின்னர் அமைச்சருடன் 3 அதிருப்தி எம்எல்ஏக்களும் புஸ்சி ஆனந்த் அறைக்கு சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பிரச்னை குறித்து பேசினார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
சட்டப் பேரவை தேர்தல் முடிந்ததும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வந்தனர். அவர்கள் திடீரென மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். ஆனால் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏ பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல், அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தவெகவில் இணையவும் அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம், தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிட்டால் மீண்டும் வெற்றி பெற முடியுமா? அப்படியே வெற்றி பெற்றாலும் தவெகவில் அமைச்சர் பதவி கிடைக்குமா? என்று இருதலை கொள்ளியாக அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிருப்தியில் உள்ள அந்த 3 அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம் சட்டசபையில் தங்களுக்கு தனியாக இருக்கை வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


