Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவத்தை சேவையாக மாற்றிய மாமனிதர்: ஒரு குடும்பத்தின் மனிதநேயப் பயணம்!

மருத்துவத்தை வியாபாரமாகப் பார்க்கும் இன்றைய சமூகத்தில், மருத்துவத்தைச் சேவையாக மாற்றி, அதை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஒரு மாமனிதரின் குடும்பம் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திரா கோலே, 1985-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வசதியான நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், வினோபா பாவே ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், பின்தங்கிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ய முடிவு செய்தார்.

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பகுதி, மருத்துவ வசதியே இல்லாத மெல்காட் பகுதியிலுள்ள பைராகர் கிராமம். பேருந்து வசதிகூட இல்லாத அந்தக் கிராமத்தைச் சென்றடைய சுமார் 40 கிலோமீட்டர் நடந்து சென்ற ரவீந்திரா கோலே, அங்கு ஒரு சிறிய குடிசையில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கினார்.

தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு மருத்துவர் தேவை என்பதை உணர்ந்த அவர், அதற்காக திருமண விளம்பரம் ஒன்றைக் கொடுத்தார். ‘Where There Is No Doctor’ என்ற புத்தகத்தின் ஒரு புகைப்படமும் அவரது வாழ்க்கையின் திசையை மாற்றியது.

40 கிலோமீட்டர் நடந்து செல்வது, வெறும் ரூ.5-ல் திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கடினமான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பெண் மருத்துவர் டாக்டர் ஸ்மிதா கோலே. ரவீந்திரா கோலேவும் ஸ்மிதாவும் இணைந்து மருத்துவத்தையும் மனிதநேயத்தையும் தங்கள் வாழ்க்கையின் நோக்கமாக மாற்றினர்.

பசி மற்றும் வறுமையே பல்வேறு நோய்களுக்கு முக்கியக் காரணம் என்பதை உணர்ந்த அவர்கள், மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்யும் வகையில் விவசாயத்தையும் ஊக்குவித்தனர்.

தான் மட்டும் பழங்குடியின மக்களுக்குச் சேவை செய்தால் போதாது என்பதை உணர்ந்த டாக்டர் ரவீந்திரா கோலே, தனது சந்ததியினரையும் சிறுவயதிலிருந்தே அந்த மக்களுக்குச் சேவை செய்யத் தயார்படுத்தினார். அதன் விளைவாக, அவரது மகன் ரோகித்தும் இந்தப் பணியில் இணைந்தார்.

தந்தையுடன் இணைந்து புதிய விதைகளைப் பயன்படுத்தி விவசாயத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட ரோகித், அவற்றின் வெற்றியை மக்களிடம் நிரூபித்தார். இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க முடிந்தது.

தொடர்ந்து சாலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் இந்தக் குடும்பம் முக்கியப் பங்காற்றியது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்ததுடன், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

ரவீந்திரா கோலேவின் தியாகத்தையும் சேவையையும் அறிந்த அமைச்சர் ஒருவர், அவர்களுக்குப் பெரிய வீடு கட்டித் தர முன்வந்தார். ஆனால், அதை மறுத்த ரவீந்திரா கோலேவும் ஸ்மிதா கோலேவும், “எங்களுக்கு வீடு வேண்டாம்; இந்த மக்களுக்கு சாலைகள் வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இன்று அந்தக் கிராமம் பல பள்ளிகளையும் மருத்துவ மையங்களையும் கொண்ட, தன்னிறைவு பெற்ற சமூகமாக வளர்ந்துள்ளது.

டாக்டர் ரவீந்திரா கோலே மற்றும் டாக்டர் ஸ்மிதா கோலே தம்பதியினர் ஒரு கிராமத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றியுள்ளனர். சேவை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது வாழ்வின் அர்த்தமாகவும் இருக்க முடியும் என்பதை அவர்கள் தங்களது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளனர்.

ஏழை மக்களின் இதயங்களில் இடம்பிடித்த இப்படிப்பட்ட மனிதர்களின் கதைகள்தான், நம் குழந்தைகளுக்கு உண்மையான சேவை உணர்வையும் மனிதநேயத்தையும் கற்றுத்தரும்.