Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பைபாஸ் சாலை தென்றல் நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம்(50). இவர், கடந்த 20 ஆண்டுகளாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலராகவும் பணியாற்றினார். இவர், தனது வீட்டில் கிளினிக் நடத்தி மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான மருத்துவம் பார்த்து வந்தார். இவரது மனைவி ஆம்பூரில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் சென்னையில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டாக்டர் சிவசுப்பிரமணியம் வழக்கம்போல் நேற்றுமாலை பணி முடிந்து வீடு திரும்பினார். இவரது மனைவி, வங்கியில் இருந்து வீடு திரும்பினார். வரும் வழியில் கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் எடுக்கவில்லையாம். இதனால் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் கணவரை காணவில்லை. ஆனால் அவரது செல்போன் வீட்டில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கிளினிக் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், இன்று மருத்துவம் பார்க்காமல் விடுமுறை விட்டு விடலாம் என சிவசுப்பிரமணியன் கூறியதாக தெரிவித்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, தாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அங்கு டாக்டர் சிவசுப்பிரமணியன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தலைமை மருத்துவ அலுவலரான சிவசுப்பிரமணியம், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலராக சில தினங்களுக்கு முன் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதன்படி முதல் நாளான நேற்று நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்று வீடு திரும்பியது தெரியவந்தது. எனவே, பணி மாறுதல் பெற்றதால் ஏதேனும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.