Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வான 2,642 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 986 மருந்தாளுநர்கள், 1021 உதவி மருத்துவர் (பொது), 788 உதவி மருத்துவர் (சிறப்பு தேர்வு), 325 ஆய்வக நுட்புநர் தரம்-III, 200 இருட்டறை உதவியாளர், 172 களப்பணி உதவியாளர், 131 உணவு பாதுகாப்பு அலுவலர், 160 ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலாளர், 107 நோய்த் தீர்வியல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 4,264 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு 5.1.2025 அன்று தேர்வு நடத்தப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தால் கடந்த 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த 2,642 மருத்துவர்கள், மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இப்புதிய மருத்துவ அலுவலர்கள் தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரிவர்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அசன் மௌலானா, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் உமா மகேஸ்வரி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் சீத்தாலட்சுமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.