இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் விபத்து: மலையில் மோதி நொறுங்கியது, புதுக்கோட்டை அருகே பரபரப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வானில் பறந்த பயிற்சி விமானம் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் ஈக்வி என்ற தனியார் விமான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 50 பேர் பயிற்சியில் சேர்வதாக கூறப்படுகிறது. இங்கு படித்து வரும் கேரளாவை சேர்ந்த 3ம் ஆண்டு மாணவர் ஹாசிர் (28), பயிற்சி விமானி ராகுல் ரமேஷ் (30) ஆகிய இருவரும் பயிற்சி மையத்தில் இருந்து செஸ்னா-172 ரக பயிற்சி விமானத்தை நேற்று காலை இயக்கி பறந்துள்ளனர்.
சேலத்தில் இருந்து வான்வெளியாக காரைக்குடி வந்துவிட்டு மீண்டும் சேலம் திரும்புவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் தலத்தை கடந்து சென்றபோது பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விமானம் கீழே இறங்கியுள்ளது. அப்போது மலை பகுதியில் லேசாக உரசியதாக கூறப்படுகிறது. சுதாரித்த பயிற்சி பைலட் ராகுல் ரமேஷ், சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மேலே பறக்க செய்துள்ளார். மலையில் உரசியதால் முன்பக்கம் நொறுங்கி இன்ஜின் கவர் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனையடுத்து விமானத்தில் இன்ஜின் பழுது ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பயிற்சி விமானி ராகுல், திருச்சி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவசர அவசரமாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கொத்தமங்கலப்பட்டி-அம்மாசத்திரம் இடைப்பட்ட பகுதி நடுரோட்டில் பிற்பகல் 12.45 மணியளவில் விமானத்தை தரையிறக்கினார். ரோட்டில் விமானம் சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. அப்போது, சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. விமானத்தின் முன்பக்கம் உடைந்து சேதம் அடைந்திருந்ததால் அந்த பகுதி காட்டுக்குள் விழுந்து கிடந்தது.
தகவல் அறிந்த கீரனூர் போலீசார், தாசில்தார் சோனை கருப்பையா, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். பொதுமக்களும் அந்த பகுதியில் குவிந்தனர். திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜூ தலைமையில் தொழில்நுட்ப பிரிவு, மீட்பு பிரிவுகளை சேர்ந்த 40பேர் வந்து விமானத்தில் ஆய்வு செய்தனர். விமானத்தில் இருந்த ராகுல், ஹாசிர்(30) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பவம் நடந்த அந்த பகுதியை சுற்றி மலை அதிகமாக இருந்ததால் விமானம் கடந்த போது தவறுதலாக மலை மேல் மோதி இன்ஜின் கவர் உடைந்திருந்ததும், இன்ஜின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பாக விமானத்தை தரை இறக்குவதற்கு பைலட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரிய வந்தது. இருவரும் திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்து கொண்டே இருந்ததால், அருகில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் டெல்லியில் உள்ள விமானபோக்குவரத்து இயக்குனரத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அமைச்சர் ரகுபதி அந்த விமானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
* பயிற்சி நிறுவனத்திற்கு உரிமம் உள்ளதா?
திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘விமானத்தில் கோளாறு ஏற்படவே, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விமான நிலையம் வரை செல்ல முடியாது என்பதை உணர்ந்துதான் சாதுரியமாக செயல்பட்டு விமானி ராகுல் தரை இறக்கி உள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. டிஜிசிஏ அதிகாரிகள் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அந்த ஆய்வில் முழு விவரமும் தெரியவரும்.
சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்திற்கு உரிமம் உள்ளதா? முறையாக பாதுகாப்பு முறைகளை கையாண்டு தான் விமானம் இயக்கப்பட்டதா? அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதா? விமானம் எதனால் சாலையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்ன? என்றெல்லாம் ஆய்வில் தெரியவரும். ஆய்வுக்கு பிறகு விமானம் எடுத்து செல்லப்படும் என்றார்.
* உயிர் தப்பியது எப்படி?
விமானத்தில் இருந்த ஹாசிர், ராகுல் ஆகியோர் கூறுகையில், ‘சேலத்தில் இருந்து காரைக்குடி வந்து மீண்டும் திருச்சி நோக்கி வந்தபோது இன்ஜின் பழுதானதால் தரையிறக்க முடிவு செய்து சாலை இருந்ததை பார்த்த உடன் எங்களுக்கு பயிற்சி மையத்தில் அறிந்த அனுபவத்தை வைத்து தரையிறக்கினோம். இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சாலை நடுவே விமானம் தரையிறங்கி சில நிமிடம் எதிர் திசையில் எந்த வாகனமும் வரவில்லை. இதனால் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இதனால் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினோம்’ என்றனர்.
* 5 மீட்டர் தூரம் விமானத்தை தள்ளி சென்று கிராமத்துக்குள் விட்ட மக்கள்
கொத்தமங்கலப்பட்டி-அம்மாசத்திரம் இடைப்பட்ட பகுதியில் நடுரோட்டில் விமானம் தரையிறங்கிய தகவல் தெரிந்து பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் 2 பக்கமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானி ராகுல் ரமேஷ் ஆலோசனை பேரில் விமானத்தை மக்கள் உதவியுடன் சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து கிராமத்திற்குள் செல்லும் சாலையில் திருப்பி நிறுத்தினர். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
* விபத்துக்குள்ளானது செஸ்னா 172 ரக விமானம்
கொத்தமங்கலப்பட்டி-அம்மாசத்திரம் பகுதியில் தரையிறங்கிய விமானம், ஈக்வி விமான பயிற்சி மையத்திற்கு சொந்தமான செஸ்னா 172 ரக விமானம் என தெரியவந்துள்ளது. இந்த விமானத்தில் பைலட்டுடன் சேர்த்து 4 பேர் பயணிக்க கூடிய வகையில் இருந்தது. இதேபோல் ஈக்வி பயிற்சி மையத்தில் செஸ்னா 152 ரக விமானமும் உள்ளது.
