சென்னை: நடப்பாண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்ப பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், மாணவ, மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் தகவல்படி, நேற்று மாலை வரை 63,476 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பப் பதிவுக்கு நாளை கடைசி நாள் (ஜூன் 25) என்பதால், அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் குறைவு என கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் திருத்தங்களுக்கான அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள், கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்து, விரைந்து விண்ணப்பப் பதிவை நிறைவு செய்யுமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தி உள்ளது.


