Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தமிழ்நாடு வெல்லட்டும்

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நிறைவு பெற்று முடிந்து விட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சி தலைவர்களும், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களும் வீதி வீதியாக வாக்கு சேகரித்து இருக்கிறார்கள். திட்டங்களையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு ஆதரவு திரட்டி இருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு இருக்கிறார். மேலும் அடுத்து வழங்க இருக்கும் ரூ.8 ஆயிரம் கூப்பன் பற்றியும், அந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பு பற்றியும் எடுத்து கூறியிருக்கிறார். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் நல திட்டங்கள், கல்விக்கான முன்னெடுப்புகள் பற்றியும், அடுத்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் 2.0 ஆட்சி பற்றியும் தனது கனவுகளையும், தேர்தல் அறிக்கை விவரங்களையும் மக்கள் முன்பு வைத்து இருக்கிறார்.

முக்கியமாக பெண்களை மிகவும் கவர்ந்த 1.31 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தினமும் 69.52 லட்சம் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண திட்டம், 12.35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி கடனுதவி வழங்கிய திட்டம் என்று 5 ஆண்டு கால ஆட்சி சாதனைகளை பட்டியலிட்டு இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் வலுவான கூட்டணியையும் அவர் முன்னெடுத்து இருக்கிறார்.

மறுபுறம் அதிமுக, பா.ஜ கூட்டணி. எல்லாமே டெல்லி மாடல். எடப்பாடியின் தேர்தல் பிரசாரமும் அந்த வகையில் தான் இருந்தது. நேற்று வரை திட்டித்தீர்த்தவர்கள் திடீரென தேர்தலுக்காக ஒன்று சேர்ந்ததும், தமிழ்நாட்டில் பா.ஜவில் அதிக அளவு இளைஞர்களை கவர்ந்து இழுத்து வந்த அண்ணாமலையை திடீரென ஓரங்கட்டியதும் கூட்டணியை சலசலத்துப்போக வைத்துவிட்டது. அதோடு டிடிவி தினகரனின் கூட்டணி வரவும் அதிமுக தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மேடையில் அண்ணன்,தம்பியாக அணைத்துக்கொண்டாலும் இந்த கூட்டணி இணைப்புக்கான பதில் இந்த தேர்தலில் மக்கள் மன்றத்தில் தெளிவாக தெரிந்து விடும்.

இந்த தேர்தலில் இன்னொரு புதுவரவு நடிகர் விஜய்யின் தவெக. அடுத்ததாக சீமானின் நாம் தமிழர் கட்சி. அத்தனை கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் போட்டி போட்டு வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். மக்களின் ஆதரவை திரட்டி இருக்கிறார்கள். அத்தனை பேரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கப்போவதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். இனி முடிவு மக்கள் கையில். நாளை காலை 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்க உள்ளது.

எஸ்ஐஆர் பணி நிறைவு பெற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல். வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்கி விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. எனவே வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் மக்கள் எழுச்சியுடன் வந்து வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்காக உறுதியாக பாடுபடும் அரசை, வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு வெல்லட்டும்.