மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக போலி கணக்கு சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.195 கோடி சொத்துகள் முடக்கம்
* சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை
சென்னை: மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்திற்கு குறைந்த விலையில் பங்குகள் விற்பனை செய்தது போல போலி கணக்கு காட்டி, ஜெர்மன் நிறுவனத்திற்கு பங்குகளை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.195 கோடி சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் பல கோடிக்கு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிறுவனம் சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ‘ஹெர்ம்ஸ் ஐ டிக்கெட்’ என்ற தனியார் நிறுவனத்தின் பங்குகளை ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியது. ஆனால் வாங்கிய பங்குகளை மொரீஷியஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குறைந்த விலையில் பங்குகளை விற்பனை செய்தது போல் வருமான வரித்துறையில் கணக்கு காட்டியுள்ளது.
அதேநேரம் அந்த பங்குகளை மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்திற்கு விற்காமல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு தனது பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. பங்குகளை விற்பனை செய்த பணத்தை இந்தியாவிற்கு கணக்கு காட்டாமல், அந்த பணத்தை, ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி ஐக்கிய அரபு நாட்டில் உள்ள 2 தனியார் நிறுவனங்களில் ரூ.195 கோடி பணத்தை சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து வந்த புகாரின் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து ஆய்வு செய்த போது, சட்டவிரோதமாக ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள 2 நிறுவனங்களில் ரூ.195 கோடி முதலீடு செய்தது உறுதியானது. அதனை தொடர்ந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.195 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

