நாடு முழுக்க கிராமங்களின் பொருளாதாரத்தில் மிக முக்கியமானதாக இருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். இந்த திட்டத்தை, ஒன்றிய அரசு, வரும் ஜூலை 1 முதல் ‘விக்சித் பாரத் - ஜி ராம் ஜி ’ (VB-G RAM G) என பெயர் மாற்றம் செய்ய உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சட்டத்தில் மாநிலங்களைவிட ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என்றும், அதேசமயம் மாநில அரசுகள் முன்பைவிட அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்கிறது.
இனி தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு வெறும் 4.1 சதவீதமாக குறைகிறது. அதாவது, வழக்கமாக கிடைக்கும் நிதியில் இருந்து சுமார் 60 சதவீதம் நிதி குறைக்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால், மக்கள்தொகை அதிகமாக உள்ள வடமாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்போகிறது. அதே நேரத்தில், இந்த திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே மிகச்சிறப்பாக செயல்படுத்தி, அதிக பலன்களை பெற்றுவந்த தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட போகிறது.
2026-27 நிதியாண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.95,692 கோடியில், தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.3,923 கோடி மட்டுமே கிடைக்க உள்ளது. தென் மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நிதி குறைக்கப்படுகிறது. இனிமேல் Normative Allocation Model என்ற புதிய மாடல் மூலமாக முன்கூட்டியே மாநிலங்களுக்கான நிதி தீர்மானிக்கப்படும். இதை கணக்கிட 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, மாநிலத்தின் தனிநபர் வருமானம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு செயல்பாடு ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேற்று முன்தினம் ரூ.95,692 கோடி இடைக்கால ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது எனவும், மொத்த ஒதுக்கீடு ரூ.1.25 லட்சம் கோடியை தாண்டும் எனவும் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த தொகையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளை சென்றடையும், இதன்மூலம் ஒவ்வொரு ஊராட்சியும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியை பெறும் எனவும் கூறியுள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இது, முந்தைய நிதி ஆண்டுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசின் இந்த பிடிவாத போக்கை, தமிழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. மாறாக, மவுனம் சாதித்து வருகிறது. தேவையின் அடிப்படையில் மக்களுக்கு வேலை தருவதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை அஸ்திவாரம்.
அந்த ஆணி வேரையே ஒன்றிய அரசு பிடுங்க பார்க்கிறது. முன்கூட்டியே இவ்வளவுதான் நிதி என்று மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்து விட்டால், இந்த திட்டத்தின் நோக்கமே சிதைத்துவிடும். வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று, மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாட்டை பாராட்டாமல், அதன் முதுகில் குத்துகிறது. ஒன்றிய அரசின் இந்த அநீதி, தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கடந்த திமுக ஆட்சி காலத்தில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு, இனி கிராமப்பகுதியில் பெரும் சரிவை சந்திக்கும்.


