Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மருதமலை கோயிலில் ஜூலைக்குள் லிப்ட் வசதி: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தொண்டாமுத்தூர்: மருதமலை கோயிலில் லிப்ட் வசதி ஜூலைக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ரூ.11.84 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தர்ப்பண மண்டபம், ரூ.51 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான கூடம், ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோசாலை, ரூ.16.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை, ரூ.11.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட பணியாளர் கழிவறை ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

பின்னர், மருதமலை கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்குதல், மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அங்கு இருந்து கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நிழல் தரும் கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைத்தல் ஆகிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

இங்கு நடைபெற்று வரும் மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வடவள்ளி பகுதியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த கல்லூரிக்கான கட்டுமான மதிப்பீடு ரூ.20 முதல் 25 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

தற்போது இதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருதமலை கோயிலின் சார்பில் கல்விச்சோலை அமைப்பதற்கான திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருதமலை கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி வெகு விரைவில் துவங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.