Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

16 வயதில் திருமணம், இன்று தன் சொந்த கிராமப் பெண்களின் நீதிக்காக குரல்!

16 வயதில் படித்துக் கொண்டிருந்த பள்ளி வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது. கனவுகள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் மாறிப்போயின. 16 வயதில் திருமணம். மத்தியப் பிரதேசத்தின், தர் மாவட்டத்தில் உள்ள பாலிபூர் கிராமத்தைச் சேர்ந்த கீதா தேவ்தாவின் வாழ்க்கை அப்படித்தான் தொடங்கியது.

திருமணத்திற்குப் பிறகு புதிய குடும்பம், புதிய சூழல், புதிய பொறுப்புகள் என வாழ்க்கை முற்றிலும் அவருடைய வயதுக்கு எதிராக மாறியது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு விவசாயப் பணிகளுக்கும் செல்ல வேண்டியிருந்தது. விவசாய அனுபவம் இல்லாத நிலையில் வயலில் போராடி உழைக்க வேண்டிய சூழல் உருவானது. அதோடு பொருளாதார நெருக்கடிகள், குடும்பப் பொறுப்புகள், பெண்கள் வீட்டிற்கு வெளியே செல்லக் கூடாது என்ற சமூக மனப்பான்மை ஆகியவை அவரை மேலும் அழுத்தின.

பல ஆண்டுகள் தன்னுடைய தேவைகள் மற்றும் ஆசைகளைப் பற்றி சிந்திக்காமல், குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்தார். அவரைப் போலவே கிராமத்தில் இருந்த பல பெண்களும் இதே வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். தங்களுக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்கே அவர்கள் தயங்கினர்.

அந்த நேரத்தில்தான் ஒரு சுயஉதவிக் குழுவுடன் கீதா இணையும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அது வெறும் சேமிப்புக் குழுவாகத்தான் தோன்றியது. ஆனால் அங்கு பெண்கள் ஒன்றாக அமர்ந்து பேசத் தொடங்கினர். குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரப் பிரச்னைகள், குழந்தைகளின் கல்வி, பெண்களின் உரிமைகள் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

அந்தக் கூட்டங்கள் கீதாவின் வாழ்க்கையை மாற்றின. பணம் சேமிப்பது மட்டுமல்ல, தன்னம்பிக்கை சேமிப்பதையும் அவர் கற்றுக்கொண்டார். இதுவரை பேசாமல் இருந்தவர், தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். பெண்கள் ஏன் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்கக்கூடாது என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்தது.

மெல்ல மெல்ல கிராமத்தின் மற்ற பெண்களுடனும் அவர் நெருக்கமாக பழகத் தொடங்கினார். பெண் குழந்தைகளின் கல்வி, குடும்ப வன்முறை, பெண்களின் பாதுகாப்பு, அரசின் நலத்திட்டங்கள், குறிப்பாக குழந்தைத் திருமணம் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்பு கூட்டங்களில் அமைதியாக அமர்ந்திருந்த பெண்கள், இன்று தங்களது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர். கிராமப்புறங்களில் பல பெண்கள் குடும்ப வன்முறை மற்றும் சமூக அநீதிகளை அனுபவித்தாலும், அதை வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள். காரணம் பயம். குடும்பம் என்ன நினைக்கும், சமூகம் என்ன பேசும் என்ற அச்சம். இந்த அமைதியை உடைக்க கீதா போராடினார். பல குடும்ப வன்முறைக்கு இரையாவதையும் கீதா பல போராட்டங்கள், அடக்குமுறைகளைத் தாண்டி களையெடுக்கத் தொடங்கினார்.

பெண்களின் பிரச்னைகளைக் கேட்டு, அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, தேவையான இடங்களில் அதிகாரிகளின் உதவியையும் பெற்றுத் தரும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நிற்கவும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஒரு காலத்தில் தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசத் தயங்கிய பெண், இன்று பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக உருவெடுத்துள்ளார். அவரின் முயற்சியால் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறவும் முன்வருகின்றனர். கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று கேள்விகள் கேட்கும் அளவுக்கு தன்னம்பிக்கை பெற்றுள்ளனர். கீதாவின் பயணம் ஒரு தனிநபரின் வெற்றிக் கதை அல்ல. ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்தால் என்ன மாற்றம் நிகழும் என்பதற்கான எடுத்துக்காட்டு. சமூக மாற்றம் என்பது பெரிய நகரங்களில் மட்டுமே உருவாக வேண்டியதில்லை. ஒரு சிறிய கிராமத்தில், சில பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால்கூட ஒரு புதிய வரலாறு எழுத முடியும் என்பதை அவரது வாழ்க்கை நிரூபித்திருக்கிறது.

பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றியை மட்டும் குறிக்கவில்லை. அது குடும்பத்தின் வளர்ச்சியையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும் நிர்ணயிக்கிறது. ஒரு பெண் தன்னம்பிக்கை பெறும்போது, அந்த மாற்றம் அவரோடு நின்றுவிடாது. அவரது குடும்பம், குழந்தைகள், கிராமம் என பலரின் வாழ்க்கையையும் மாற்றும் என்பதற்கு கீதாவின் வாழ்க்கையே சாட்சி.

தற்போது கீதாவின் செயல்பாடுகள் பக்கத்து கிராமங்கள் வரைப் பரவி அங்கேயும் சிறப்பு முகாம்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் என நடத்திவருகிறார் கீதா தேவ்தா.

- ஆ.கவின்.