தியோரியா: உத்தரபிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய ஆசிரியை ஒருவரை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை கார் டிக்கியில் மறைத்து வைத்த பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஜங்கஹா பகுதியை சேர்ந்த ராணி விஸ்வகர்மா (26), சவுரி சௌரா பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே பள்ளியின் தாளாளரான விஜய் நிஷாத் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆசிரியை ராணியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
நாளடைவில் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு விஜய் நிஷாத்தை அந்த ஆசிரியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி கடும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி காலை பள்ளிக்கு வந்த ஆசிரியை, திருமண விவகாரம் குறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தாளாளர், சமாதானம் பேசுவதாகக் கூறி தனது காரில் ராணியை மீத்தா பெல் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு காரின் பின் இருக்கையில் வைத்து ஆசிரியையின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் ஆசிரியையின் உடலை காரின் டிக்கியில் மறைத்து வைத்து நாள் முழுவதும் காரை ஓட்டியபடி அப்பகுதி முழுவதும் சுற்றியுள்ளார்.
ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் ஆசிரியையின் செல்போனை அடித்து உடைத்து, அவருடைய ஏடிஎம் கார்டையும் வழியில் வீசியுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் ருத்ரபூர் பகுதி புதரில் உடலை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். புதரில் கிடந்த ஆசிரியையின் சடலத்தை மீட்ட ருத்ரபூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொ*யாளியின் கொடூர முகம் அம்பலமானது. இதுகுறித்து தியோரியா மாவட்ட எஸ்பி அபிஜீத் ஆர் சங்கர் கூறுகையில், ‘குற்றவாளி விஜய் நிஷாத்தை கைது செய்து விசாரித்து வருகிறோம். இந்த கொடூர கொ*யில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.


