திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி; பாலியல் வழக்கில் தொடர்புடைய நீதிபதி போக்சோ வழக்கை விசாரிக்கலாமா?: ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடெல்லி: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மாவட்ட நீதிபதி போக்சோ நீதிமன்றத்தை நடத்தலாமா என்பது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமான பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக, உத்தரபிரதேச மாநில கூடுதல் மாவட்ட நீதிபதி மீது கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி டெல்லி மயூர் விகார் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நீதிபதிக்கு எதிராக பாலியல் பலாத்கார சட்டப்பிரிவு 376 கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஆனால் இந்த நீதிபதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை விசாரிக்கும் போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதியாக தொடர்ந்து செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நீதிபதியின் நீதித்துறை பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் குமார் சிங், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதியிடம் இருந்து உடனடியாக நீதிமன்ற பணிகளை திரும்பப் பெற வேண்டும் என வாதிட்டார். இந்த மனுவை தீவிரமாக பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, போக்சோ நீதிமன்றத்தை நடத்தும் நீதிபதியை பணியிடை நீக்கம் செய்வது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகம் டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


