Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணப்பாடு கடற்கரையில் ‘சுவை’ கிணறு

*ஆர்வத்துடன் தண்ணீரை சேகரிக்கும் பொதுமக்கள்

உடன்குடி : மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள கிணற்றில் கிடைக்கும் தண்ணீர் சுவையாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தண்ணீரை அத்தியாவசிய தேவைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மணப்பாடு கிராமம் முழுக்க முழுக்க கடலோர கிராமம் ஆகும். பல்வேறு கட்டிட சிறப்புகள், மணல் குன்றின் மீது அமைந்துள்ள திருக்கோயில், கடல் அலை தழுவிச் செல்லும் பகுதியில் உள்ள அதிசய கிணறு மற்றும் இந்த பகுதி மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்காக இன்றுவரை பயன்படுத்தும் சுவை நிறைந்த குடிநீர் கிணறு பயன்பாட்டில் உள்ளது.

ஏழைகளின் கோவா என்றழைக்கப்படும் மணப்பாடு. இங்கு ஒருபுறம் கடல் ஆர்ப்பரிப்பாகவும், மறுபுறம் அமைதியாகவும் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பவர்கள், இவ்வழியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான மணப்பாடு மற்றும் ஆன்மீக ஸ்தலமான குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

மணப்பாட்டில் ஏராளமான சினிமா பட சூட்டிங் நடந்துள்ளன. பல்வேறு பெருமைகள், வரலாற்று சிறப்புகள் மிகுந்த மீனவ கிராமத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் இங்குள்ள கடற்கரை பகுதியிலுள்ள கிணற்று தண்ணீர் மிக, மிக சுவையாக உள்ளது.

இந்த கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. மினரல் வாட்டர். பாட்டில் தண்ணீர் இப்படி எத்தனை வசதி இருந்தாலும் இங்குள்ள பெரும்பாலான மக்கள் கிணற்று தண்ணீரை தான் குடித்து வருகின்றனர். கிணற்றில் ஊறும் தண்ணீர்தான், அதுவும் கடற்கரை பக்கத்தில் இப்படி சுவையான குடிநீர் கிடைப்பது உண்மையிலே அதிசயம் தான்.

இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனம், நடைபயணம் என இங்கு வரும் மக்கள் குடம், குடமாக தண்ணீர் எடுத்து செல்வதும், கிணற்று தண்ணீரை தெரு தெருவாக எடுத்து சென்று ஒரு குடம் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்வதையும் சிலர் தொழிலாகவும் வைத்துள்ளனர்.

இங்கு கிணற்று தண்ணீர் எடுக்க குடத்துடன் வந்த பெண்கள் கூறுகையில், குடிநீர் விதவிதமாக எந்த வடிவத்தில் வந்தாலும் கிணற்று தண்ணீர் சுவையே சுவைதான். சமையலுக்கு பயன்படுத்தும் போது அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் உடனே பக்குவமாக வெந்துவிடும். இதனால் காஸ் மிச்சம், அடுப்பு வேலை குறையும், டீ, காபி போட்டால் சுவையாக இருக்கும், என்றனர்.