மார்கே என்பது மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய காட்டுப்பூனை ஆகும். இந்த பூனைகள் பசுமையான மற்றும் இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன.
தலை சற்று சிறியதாகவும், கண்கள் பெரியதாகவும், வால் மற்றும் கால்கள் நீளமாகவும் இருக்கும். இதன் எடை 2.6 முதல் 4 கிலோ வரை இருக்கும். உடல் நீளம் 48 முதல் 79 செ.மீ வரை இருக்கும். இதன் ரோமம் பழுப்பு நிறத்திலும், ஏராளமான அடர் பழுப்பு அல்லது கறுப்புநிறத்தில் வளையங்களும் மற்றும் நீளமான கோடுகளுடன் இருக்கும். அடிப்பகுதி வெளிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும் வால் ஏராளமான அடர் பழுப்பு நிற பட்டைகள் மற்றும் கறுப்பு முனையைக் கொண்டுள்ளது. காதுகளின் பின்புறம் கறுப்பு நிறத்தில் மையத்தில் வட்ட வெள்ளை அடையாளங்களுடன் இருக்கும்.
இந்த மார்கே மெக்ஸிகோவின் வெப்பமண்டல தாழ்நிலப் பகுதிகளிலிருந்து மத்திய அமெரிக்கா வழியாக பிரேசில் மற்றும் பராகுவே வரை பரவியுள்ளது.மார்கே சிறிய விலங்குகளான அணில், டிட்டி குரங்குகள், பறவைகள், பல்லிகள் சிறிய பாம்புகள், மரத் தவளைகள் ஆகியவற்றை உண்கின்றன.சில நேரம் புல், பழங்கள் மற்றும் பிற தாவரங்களையும் சாப்பிடுகிறது.


