வீரமான, தைரியமான காவல்துறை அதிகாரி என்றாலே ஆண்களை மையமாக மட்டுமே வைத்து திரைக்கதை அமைக்கும் இந்திய சினிமாவில் அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது வரும் முக்கியமான பெண் காவல்துறை அதிகாரி திரைப்படங்களில் ‘‘மார்தானி” திரைப்படப் பாகங்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியானது. பொதுவாகவே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல் அவர்கள் மேல் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை என செல்லும் இந்த மர்தானி திரைப்பட சீரிஸ்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு உள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் முதல் பாகம் பிரதிப் சர்கார் இயக்கினார். இரண்டாம் பாகம் கோபி புத்ரன் இயக்கம். தற்போது 3ஆம் பாகத்தை அபிராஜ் மினவாலா இயக்கியிருக்கிறார். மூன்று பாகங்களிலும் நாயகி ராணி முகர்ஜிதான்.
விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிறுமிகள் ஒரே நேரத்தில் சில மர்மக் கும்பலால் கடத்தப்படுகிறார்கள். அதில் ஒரு பெண் குழந்தை ஊரின் மிகப்பெரிய விஐபியின் குழந்தை. அந்த குழந்தையை தேடி கிளம்புகிறார் காவல்துறை அதிகாரி சிவானி சிவாஜி ராய் ஐபிஎஸ் (ராணி முகர்ஜி). தேடலில்தான் இன்னும் பல பெண் குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வருகிறது. மேலும் இதற்குப் பின்னணியில் அம்மா ( மல்லிகா பிரசாத்) என்கிற பெரிய பெண் தாதா இருப்பது தெரிய வருகிறது.
இந்த முறை பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவது பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது உறுப்பு மாற்றங்களுக்கு கிடையாது. குறிப்பிட்ட பாலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு மருந்து கண்டுபிடிக்க சோதனை எலிகளாக இந்த பெண் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரிய வர அவர்களை காப்பாற்ற போராடுகிறார் சிவானி. முதல் இரண்டு பாகங்களில் ஆண் வில்லன்களுடன் மோதிய சிவானி இந்த முறை பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்கிற கான்செப்ட்டை மையமாக வைத்து போராடி இருக்கிறார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும் பட்சத்தில் தற்போது பாலியல் நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்க ஆய்வுக்கூடத்திற்கான சோதனை மனிதர்கள் ஆகவும் இந்த பெண் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்கிற புது பிரச்னையையும் இந்த கதை பேசி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தற்போதைய தரவுப்படி ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சுமார் 170 முதல் 172 பெண் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இந்நிலையில் இப்படிப்பட்ட காரணங்களுக்காகவும் பெண் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்கிற பிரச்னையை ‘‘மர்தானி 3” திரைப்படம் பேசி இருப்பது பாராட்டுக்குரியது. தற்சமயம் இப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
- மகளிர் மலர் குழு.
