Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 5ம் தேதி சென்னையில் பிரமாண்ட நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

* கே.சி.வேணுகோபால் பங்கேற்பு

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 5ம்தேதி சென்னையில் நடைபெற உள்ள பிரமாண்ட நடைபயணத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்கிறார் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜ அரசை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் (5ம்தேதி) வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் மாபெரும் நடைபயணம், கிழக்கு தாம்பரம் - பாரதமாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் - சண்முகம் சாலை வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த நடைபயண நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சி.மனோகரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும், இந்த நடைபயண நிகழ்ச்சிகள் பிப்ரவரி 7ம்தேதி சனிக்கிழமை திருச்சியிலும், 8ம்தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லிலும், 9ம்தேதி திங்கட்கிழமை தென்காசியிலும், 12ம்தேதி வியாழக்கிழமை கோவையிலும் நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சார்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த நடைபயணம், வெற்றிகரமாக அமைய திரளாகப் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.