Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன்னார்குடி, திருவண்ணாமலை தொகுதி அலசல்

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி 1952 முதல் 16 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக உள்ள திமுகவை சேர்ந்த அமைச்சர் டிஆர்பி.ராஜா 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து 3 முறையாக இந்த தொகுதியில் ‘ஹாட்ரிக் வெற்றி’ பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த தேர்தலில் டிஆர்பி. ராஜா 87,172 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம் 49,779 வாக்குகளும், அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் 40,481 வாக்குகளும் பெற்றிருந்தனர். கடந்த 2 முறை அதிமுக ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் பாரபட்சம் காரணமாக தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனாலும், தொகுதி மக்களுக்காக தேவைப்படும் போதெல்லாம் சட்டசபையில் குரல் கொடுத்து வந்தார். சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதி மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொண்டார். இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ஓராண்டு கழித்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

கடந்த 5 ஆண்டில் தொகுதிக்கு தேவையான எண்ணற்ற பணிகளை டிஆர்பி.ராஜா செய்து முடித்துள்ளார். குறிப்பாக நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற அரை நூற்றாண்டு கால கோரிக்கையை தற்போது செயல்படுத்தி காட்டியுள்ளார். ரூ.170 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட அந்தப் பணி தற்போது முடியும்

தறுவாயில் உள்ளது.

இதேபோல மன்னார்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது. 2 பேருந்து நிலையமாக இருந்து வந்த மன்னார்குடி பேருந்து நிலையம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக ரூ.47 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ரூ.156 கோடியில் சுற்றுவட்ட சாலை, ரூ.46 கோடியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலை, நபார்டு உதவியுடன் ரூ.26 கோடியில் சாலை பணிகள், அரசு மாவட்ட மருத்துவமனை ரூ.30 கோடியில் சீரமைப்பு, ரூ.16 கோடியில் ராஜ கோபால சுவாமி கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தது. ஏறக்குறைய மன்னார்குடி தொகுதியில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு மேல் பணிகள்

நடைபெற்றுள்ளது. கடந்த 2021 முதல், தமிழ்நாடு அரசு ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. 1,176க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இந்த முதலீடுகள் பெறப்பட்டு, 80 சதவீத திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2025ம் ஆண்டில் மட்டும் ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 36.4 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு இந்த மூதலீடுகள் கிடைக்க அமைச்சர் டிஆர்பி ராஜா அயராது உழைத்துள்ளார்.

மன்னார்குடி தொகுதியின் ஹாட்ரிக் எம்.எல்.ஏ, தொழில்துறை மூலம் முதலீடுகளை ஈர்க்கும் வேகம் என பன்முகத் தன்மையுடன் வலம் வரும் டி.ஆர்.பி. ராஜா, தற்போது 4வது முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார்.

அவரது பணிகள், உழைப்பு, வேகம் ஆகியவை காரணமாக அவருக்கு 4வது முறையாக மகுடம் சூட்ட மக்களும் தயாராக இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது. உலகின் புகழ்மிக்க ஆன்மிக நகரங்களின் பட்டியலில் திருவண்ணாமலைக்கு தனித்துவமான இடம் இருப்பதை போல, அரசியல், சமூகம், பண்பாட்டு வரலாற்றிலும் திருவண்ணாமலைக்கு எப்போதும் சிறப்புமிக்க இடமுண்டு. 1949ல் உருவான திமுக, 1957ல் தேர்தல் களத்தில் இறங்கியபோது முதல் வெற்றியை அளித்தது திருவண்ணாமலை தொகுதி. திமுகவுக்கு முதல் நகரசபைத் தலைவர் மற்றும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரை வழங்கிய பெருமையோடு, பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியை அமைக்க திருப்புமுனையாக திகழ்ந்ததும் திருவண்ணாமலை தொகுதிதான். கடந்த 1957ம் ஆண்டு உருவான இத்தொகுதி, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய தொகுதி. கடந்த 1957ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 15 தேர்தல்களிலும் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை கூட அதிமுக இத்தொகுதியில் வென்றதில்லை என்பது வரலாறு. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2011ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வெற்றி வாகை சூடுகிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. ஏற்கனவே, கடந்த 1984, 2001, 2006ம் ஆண்டுகளில் தண்டராம்பட்டு சட்டமன்ற தொகுதியில் வென்றவர். 2006-2011 வரை உணவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

2021ல் தேர்தலில் வெற்றி பெற்ற எ.வ.வேலு, 6 முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார். அதோடு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் தொகுதி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை தாரக மந்திரமாக கொண்ட எ.வ.வேலுவை, எதிலும் வல்லவர் என மனம் நிறைந்து பாராட்டினார் கலைஞர். அதனை, ஒவ்வொரு மேடையிலும் மனம் திறந்து வழிமொழிகிறார் முதல்வர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு போக்குவரத்துக்கழக மண்டலம், பாதாள சாக்கடை திட்டம், சாத்தனூர் 3வது கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவை இவரால் கொண்டுவரப்பட்டவை. தொகுதியில் இவர் ஏற்படுத்தியுள்ள தூய்மை அருணை அமைப்பு, தளபதி இலவச கணினி மையம், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, போட்டித் தேர்வுக்கான நூலகம், மாதந்தோறும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு போன்றவை இவரது அரசியல் சாராத தொண்டுகள்.

திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, ரூ.46 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம், காந்தி நகரில் ரூ.29.25 கோடியில் காய்கறி வணிக வளாகம், திருவண்ணாமலையை இணைக்கும் பிரதான சாலைகள் நான்குவழி சாலைகளாக தரம் உயர்வு, எடப்பாளையம் பகுதியில் 40 ஏக்கரில் எழில்மிகு பூங்கா, ரூ.37 கோடியில் புதிய டைடல் பார்க், ரூ.64 கோடியில் கிரிவலப்பாதையில் புதிய தங்கும் விடுதி, ரூ.3 கோடியில் 5 இடங்களில் நவீன சுகாதார வளாகங்கள், ரூ.12.17 கோடியில் புதிய மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம், அரசு மாதிரி பள்ளி என கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்துள்ள ஏராளமான பணிகளை மக்கள் பாராட்டுகின்றனர். எனவே, இத்தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்ற கருத்து வெளிப்படையாக மக்களிடம் தெரிகிறது. அதனால், இத்தொகுதியில் நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு தள்ளிவிடலாம் என அதிமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. ஆன்மிக நகரம் என்பதால் கடந்த தேர்தலை போல, இந்த தேர்தலிலும் பாஜ இத்தொகுதியை கேட்டுப் பெறும் என கூறப்படுகிறது. ஆனாலும், அவர்களுக்கு அதிமுகவின் ஒத்துழைப்பு எந்த அளவில் இருக்கும் என்பது கேள்விக்குறியே. இத்தொகுதியில் போட்டியிட மற்ற அரசியல் கட்சிகளிடையே மறைமுக தயக்கம் காணப்படுவதால், திருவண்ணாமலை தொகுதி திமுகவின் கோட்டையாக இத்தேர்தலிலும் திகழ்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.