Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதிய விலை இல்லாததால் மரங்களிலேயே அழுகி வீணாகும் மாங்காய்கள்

*நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில், போதிய விலை கிடைக்காததால், மரங்களிலேயே மாங்காய்கள் அழுகி வீணாகி வருகிறது. இதனால் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல், மா விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில், மாங்கூழ் மற்றும் மாங்கனி ஏற்றுமதி மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால், மா விவசாயிகள் விலை குறைவால் நஷ்டம் அடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கடும் வெப்பத்தால், மா மகசூல் முழுமையாக பாதித்தது.

இதில் மரங்கள் காய்ந்த நிலையில், மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களை, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. ஆனால், இதுநாள் வரை நிவாரணம் வழங்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில், மா விவசாயிகளை பாதுகாக்க ஒரு கிலோ மாங்கனிக்கு ரூ.5 வழங்கி வருகிறது. அது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் என மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போச்சம்பள்ளி தாலுகா, தட்டக்கல் கிராமத்தில் விவசாயி ராஜேஷ் என்பவரது தோட்டத்தில், உரிய விலை கிடைக்காததால், மாங்காய்களை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளார். இவற்றை ஆடுகள் மற்றும் குரங்குகள் சாப்பிட்டு வருகின்றன. இது குறித்து அவர் கூறுகையில், ‘பெங்களூரா மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் மாங்காய்களை வாங்க முன்வராததால் நான் தோட்டத்திலேயே விட்டுள்ளேன். இந்த மாங்காய்களை ஆடு மற்றும் குரங்குகள் சாப்பிட்டு வருகிறது. இதுவரை சுமார் 2 டன் மாங்காய்கள் கீழே விழுந்து வருகிறது. அதனை கண்டால், கண்ணீர் வருகிறது. அறுவடை கூலி மற்றும் செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளோம்,’ என்றார்.

இது குறித்து மா விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சௌந்தராஜன் கூறுகையில், ‘தமிழக அரசின் விவசாய பட்ஜெட்டில், 4வது ஆண்டாக மா சாகுபடி பற்றி ஒரு வரி கூட இல்லாமல் தாக்கல் செய்கிறார்கள். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மா சாகுபடியையும், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்கள் மாங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.12 வழங்கிறோம் என்று அறிவித்தனர். அதை செயல்படுத்த வேண்டும்,’ என்றார்.

மா விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறுகையில், ‘சில ஆண்டாக மா விளைச்சல் தொடர் சரிவை சந்தித்த நிலையில், நடப்பாண்டில் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் போதிய விலை இல்லை. இதனால் மா விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும், வெளி மாநிலங்களில் இருந்து மாங்கூழ் நிறுவனத்திற்கு மாங்காய்கள் வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தரம் கெடுகிறது. இதனால் மா விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, வெளி மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும் மாங்காய்களை தடை செய்து, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மாங்களை மட்டும் வாங்கி மாங்கூழ் உற்பத்தி செய்ய வேண்டும்,’ என்றார்.