Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாம்பழ கட்சியின் மூத்த தலைகள் என்ன செய்வது என தெரியாமல் திணறிக்கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மலராத கட்சியில் மன்னர் மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என தனித்தனி புகார் கடிதங்கள் பறக்குதாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மன்னர் மாவட்டத்தில் மலராத கட்சிக்கு பல்வேறு இடங்களில் நிர்வாகிகளை நியமிக்கணும். சில இடங்களில் மாற்ற வேண்டும்னு கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தனித்தனியாக புகார் கடிதங்களை அனுப்பி வர்றாங்களாம்.. குறிப்பாக கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு கட்சியில் பனிப்போர் நிலவி வருது.. மாவட்ட அளவில் உள்ளவர் மற்றும் பலரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாம்.. மாவட்ட பொருளாளராக இருக்கும் முருகன் பெயர் கொண்டவர் தன்னோட நெருக்கமானவர்களை தவிர மற்றவர்களை மதிப்பதில்லையாம்.. பெரிய அளவில் சுவீட் பாக்ஸ் வைத்திருப்பதால் அவர்களை எதிர்க்கவும் செய்யாமல் நிர்வாகிகள் மவுனம் காக்கின்றனராம்.. கட்சியில் உள்ள நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று மனு அனுப்பியுள்ளனர்.. மனு குறித்த விசாரணை முடிவில் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கின்றனராம்.. ஆனால் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனி கூட்டம் போட்டு மாற்றுக்கட்சிக்கு போக திட்டமிட்டுள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திருட்டு சம்பவத்தில் உயர் அதிகாரி டோஸ் விட்டதால் புலம்பி தவிக்கிறாராமே பெண் இன்ஸ்பெக்டர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் என்று முடியும் மாவட்ட தலைநகரில் எம்எல்ஏ வீட்டின் அருகே பூட்டிய வீட்டில் சமீபத்தில் நகை, திருட்டு சம்பவம் அரங்கேறியதாம்.. இதனால் அந்த லிமிட்டில் உள்ள நகர காக்கி ஸ்டேஷனில் பிரபல பெண் பாடகரின் பெயரைக் கொண்ட இன்சுக்கும் மேலிடத்தில் இருந்து கடுமையான டோஸ் விழுந்ததாம்.. ஸ்டேஷனில் போதிய எண்ணிக்கையில் காக்கிகள் இல்லாததால்தான் இந்த நிலை... நாங்கள் என்ன செய்வது... என இன்ஸ். முணுமுணுத்தாராம்..

திருட்டு நடந்ததுமே எங்களை உயர் அதிகாரிங்க சத்தம் போடுறாங்க.. போதிய எண்ணிக்கையில் உடனே காக்கிகளை நியமிக்க கேட்டா எந்த நடவடிக்கையும் இல்லையே, நாங்கள் என்ன செய்வதுன்னு புலம்பலை கொட்டினாராம்.. பின்னர் இந்த தகவல் கசிந்தா, கதையை முடிச்சிடுவாங்க, அதனால கனவுபோல் இப்படியே மறந்திடுங்க என வீடியோ படம் எடுத்தவர்களிடம் கெஞ்சினாராம் அந்த பெண் இன்ஸ்..” என்றார் விக்கியானந்தா...

‘‘மாங்கனி கட்சி விவகாரத்தில் இளைய தலைமுறையினர் மகன் பக்கம் நிற்கும் நிலையில், மூத்த தலைகள் என்ன செய்வது என தெரியாமல் தள்ளாடுறாங்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பழம் கட்சிக்காரங்களுக்கு புதுசா முளைத்த கட்சிகள் எல்லாம் வலைவிரிச்சிருக்குதாம். பழம் கட்சியில் தந்தைக்கும், மகனுக்குமான அதிகாரப்போட்டி, அக்கட்சியில் உள்ள இளையதலைமுறையினர் மகன் பக்கமே நிற்கும் நிலையில், சாதி சங்கமாக இருந்த காலம்தொட்டு உள்ள மூத்த தலைவர்கள் நிலைதான் தராசு முள் போல தள்ளாடுகிறதாம்.. குறிப்பாக வெயிலூர், மிஸ்டர் பத்து, குயின்பேட்டையில் இளசுகள் எல்லாம் அன்பானவருக்கு தோதாக இருக்க, நடுத்தர வயது, மூத்த தலைவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்து விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டார்களாம்.. வரும் தேர்தலில் எப்படியாவது இலை கட்சி கூட்டணிக்கு சென்று சீட் பெற்று எம்எல்ஏவாகி விடலாம் என்ற கனவில் இருந்தவர்கள் என்னடா, இது இப்படி ஆகிபோச்சே. நம்ம கட்சியும் முரசு கட்சி நிலைக்கு போய் விடுமோ, நாமும் உள்ளூர் அரசியலில் ஆதரவில்லாமல் போய்விடுவோமோ என்று தவித்து வருகிறார்களாம்.. இவர்களது தவிப்பை பயன்படுத்தி புதிதாக முளைத்த கட்சிகள் தொடங்கி பல கட்சிகளும் அவர்களுக்கு வலைவிரித்திருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மா.செ.வாக மீண்டும் வருவேன் என இலைக்கட்சி தலைவரின், பதவி பறிக்கப்பட்ட பினாமி சபதம் போடுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் ரெண்டு பேருக்கு நடந்த பர்த்டே பார்ட்டி தான் இலைக்கட்சி தொண்டர்களிடையே ஒரே பேச்சாக இருக்காம். இலைக்கட்சி தலைவரின் நிழலானவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் அதிகாலையில் இருந்தே களைகட்டியதாம்.. மாவட்டம் முழுவதிலுமிருந்து அணி அணியாக வந்து ஆசி வாங்கினாங்களாம்.. 60 கிலோ கேக் வெட்டியபோது, யாரும் போட்டோ எடுத்திடாதீங்கன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல், ரொம்பவே உஷாரா இருந்தாராம்.. தனக்கு மலர் மாலை போடாதீங்க, கோயில் தேருக்கு சென்று போடுங்கன்னு டைவர்சன் பண்ணிக்கிட்டே இருந்தாராம்.. அவரை கூல் படுத்தும் வகையில் மாநகரில் இருந்து சென்ற நிர்வாகி, ஆயிரம் பேருக்கு பொட்டல சாப்பாடு போட்டாராம்.. இப்படியாக காலை முதல் மாலை வரை ஜரூராக போய்கிட்டிருந்த நிலையில், மாநகரிலும் பர்த்டே நடந்துச்சாம்.. இலைக்கட்சி தலைவரின் பினாமி என ரத்தத்தின் ரத்தங்களால் கூறப்பட்ட மாஜி மா.செ.வின் பர்த்டேவாம் அது.. தொடர்ச்சியாக ரெண்டுமுறை எம்எல்ஏவாகவும், பத்து ஆண்டுகள் மா.செ.வா இருந்த அவரது பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டதாம்..

அவருக்கென ஆதரவாளர்கள் குறிப்பிட்டு சொல்லும் வகையில் இல்லையாம்.. இதனால் பொறுப்பாளர்கள் அவரை ஓரங்கட்டிட்டாங்களாம்.. பிறந்த நாளுக்கு எண்ணிக்கை அளவிலானவர்கள் தான் வாழ்த்து சொன்னாங்களாம்.. வழக்கமாக வருபவர்கள் கூட வரலையாம்.. இலைக்கட்சி தலைவரின் கோப பார்வை அவர் மீது இருக்குது.. யாராவது வாழ்த்து சொல்லப் போனால், பதவிகள் பறிக்கப்படும் என சிலர் மிரட்டல் விடுத்தாங்களாம்.. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் பயந்து விட்டதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க.. என்றாலும் மனம் தளராத அந்த மாஜியோ ரெண்டு கோயிலுக்கு போயிட்டு மகிழ்ச்சியா வீடு திரும்பியிருக்காரு.. பொதுச்செயலாளரின் ஆசி எனக்கு இருக்குது.. மீண்டும் மா.செ. ஆவேன் என உறுதியா சொல்லிக்கிட்டிருக்காராம்.. அவர் பினாமி என்பதால், எல்லாமே நடக்குமுன்னும் பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.