‘‘ஆரூடம் பலிச்சிடக்கூடாது என்பதால் அல்வா ஊர்க்காரர் தொகுதி மாற முடிவு செய்துட்டாராமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்ட இலை கட்சியினர் மிகவும் உற்சாகத்தில் மிதக்கிறார்களாம்.. அதாவது கடந்த 2001ல் இருந்து அல்வா தொகுதியில் தற்போதைய மலராத தேசிய கட்சியின் மாநில தலைவர் தான் போட்டியிட்டு வருகிறார்.. கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட அவர் 2 முறை இலை கட்சியின் சார்பிலும், ஒரு முறை தேசிய கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.. இரண்டு முறை இலை கட்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து விட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் இலை கட்சியில் இருந்து மலராத தேசிய கட்சிக்கு தாவி இருந்தாலும், விடாப்பிடியாக தொகுதியை கேட்டுப் பெற்று வெற்றியும் பெற்று விட்டார். அவரை பொறுத்தவரை ஒரு தேர்தலில் வென்றால் அடுத்த தேர்தலில் தோற்று விடுவார். அவரது ராசி அப்படி.. ஆரூடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அவர் இந்த முறை அல்வா தொகுதியில் நிற்க விரும்பவில்லையாம்.. அதற்கு முக்கிய காரணம், தோல்வி பயம் தான் ஆட்டிப் படைக்கிறதாம்.. இதனால் தொகுதி மாற முடிவு செய்திருக்கிறாராம்.. ஏற்கனவே கடந்த முறை அவர் அல்வா தொகுதியில் நிற்பதை விரும்பாத இலை கட்சியினர் கடும் கடுப்பில் இருந்தாங்களாம்.. கட்சியை விட்டு கழன்றவர் தொகுதியை கேட்டு அடம் பிடிக்கிறாரே என இலை கட்சியினர் அதிருப்தியில் இருந்திருக்காங்க.. தற்போது தேசிய கட்சியின் கூட்டணியையே இலை கட்சியினர் வெறுத்து ஒதுக்கும் நிலையில், அல்வா தொகுதியின் எம்எல்ஏ முடிவால் அந்த மாவட்ட இலை கட்சியினர் அந்த தொகுதியில் போட்டியிட கடும் முஸ்தீபு காட்டுகிறார்களாம்.. இதனால் சமூக ஆதரவு அடிப்படையில் தங்களுக்குதான் சீட் கிடைக்கும் என நம்பி பலர் போட்டிப் போட்டு விருப்ப மனுவுக்கு பணம் கட்டி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஐந்தாண்டாக எதுவும் செய்யாதவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதற்கு மலராத கட்சியை சேர்ந்தவர்களே கடுமையாக எதிர்க்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் தலைநகர சட்டமன்ற தொகுதி மலராத கட்சியின் வசம் தற்போது இருக்கு.. கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளை கூட்டணியில் இலை கட்சி உள்பட யாருக்கும் விட்டுக்கொடுப்பது இல்லை என்று மலராத கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாம்.. இதனால் மீண்டும் களம் காண்பது என்பதில் தேசத் தந்தையின் பெயரை கொண்டவர் உறுதியாக உள்ளாராம்.. இதற்காக அவர் அண்மை காலமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டு தனது இருப்பை காட்டி வருகிறாராம்.. அவர் மீது வேறு குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாததால் அவரையே வேட்பாளராக நிறுத்தினாலும் நிறுத்துவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பு பக்கவாத்தியம் இசைக்கிறார்களாம்.. 5 ஆண்டுகள் அவர் என்ன செய்தார், மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதற்கு என்று மலராத கட்சியை சேர்ந்தவர்களே கேள்வி எழுப்புகிறார்களாம்.. கூடவே இந்த முறை எப்படியாவது சீட்டை பெற வேண்டும் என பலரும் மலராத கட்சியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்களாம்.. இதனால் தொகுதியை நம்பியிருந்த இலை கட்சியினர் நிலை இலவு காத்த கிளி கதையாகியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரொம்பவே தொந்தரவு கொடுக்கும் மகனுக்கு எதிராக புதிய அஸ்திரத்தை ஏவப் போகிறாராமே தந்தையானவர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தைலாபுரத்துக்காரருக்கும், அவரது பனையூர் மகனுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியிருக்காம்.. கட்சியும், சின்னமும் எனக்கு தான் என கூறிக்கொண்டே, தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களையும் மகன் வாங்கிக்கிட்டிருக்காராம்.. தேர்தல் கமிஷனில் தலைவரும் நானே, கட்சியும் என்னோடதுன்னு சொல்லி அதற்கான ஆர்டரையும் வாங்கியிட்டாராம் மகன்.. இவ்வாறு செய்வதன் மூலம் யாரும் தன்னை அசைக்க முடியாதுன்னு நினைத்துக்கொண்டிருந்த நிலையில், தந்தை நான் ஒரு சாணக்கியன் என நிரூபிக்கும் வகையில் தேர்தல் கமிஷனில் பதில் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கும் சென்றாராம்.. இதனை சற்றும் எதிர்பாராத தேர்தல் ஆணையமோ... பனையூர்காரரை தலைவருன்னு நாங்க சொல்லலன்னு கையை மேலே தூக்கிவிட்டதாம்.. கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் தான் என்பதை போல புதுபுது பொய் குண்டுகளை மகன் தரப்பு உருட்டி விட்டுக்கிட்டே இருக்காங்களாம்.. எங்களுக்குள் ஏற்பட்ட மோதலுக்கு பெரிய கட்சி தான் காரணமுன்னும் சொல்லி பொய்க்கு மேல் பொய்யா சொன்னாராம்.. ஆனால் இந்த பிரச்னைக்கு மகனின் மனைவியான மருமகள்தான் முக்கிய காரணமுன்னு தோட்டத்துக்காரர் அடிச்சி சொல்லியிருக்காரு.. மகனுக்கு மருமகள் தலையணை மந்திரம் போட்டுவிட்டதால் தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் எனவும், அதிலிருந்து அவர் விடுதலையாக வேண்டும் எனவும் ரொம்பவே கடுமையா மகனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்காராம்.. என்றாலும் மகனின் அரசியல் டார்ச்சர் தந்தையை ரொம்பவே தொந்தரவு செஞ்சிக்கிட்டிருக்காம்.. இதனால புதிய அஸ்திரத்தை எடுத்து வீசப்போறாராம் தோட்டத்துக்காரரு.. மகாராஷ்டிராவில் சரத்பவாருடன் இருந்துக்கிட்டே ஊழலில் இருந்து தப்பிக்கும் வகையில் அவரது உறவினரான அஜித்பவார் கட்சியை உடைச்சிக்கிட்டு வெளியே வந்து மலராத தேசிய கட்சியுடன் சேர்ந்ததும் இல்லாமல் கட்சி என்னோடதுன்னு சொல்லிக்கிட்டே சரத்பவாரின் படத்தையும் போட்டு ஏமாத்தினாராம்.. இது தொடர்பா கோர்ட்டுக்கு போனபோது, படத்தை பயன்படுத்த கூடாதுன்னு உத்தரவு வந்துச்சாம்.. அதே போலவே தோட்டத்துக்காரரும் பயன்படுத்த போறாராம்.. தன்னோட பெயரையும் படத்தையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த கூடாதுன்னு கோர்ட்டுக்கு போகப்போறதாக அவரோடு நெருக்கமான நிர்வாகிகள் சொல்றாங்க.. டெல்லியில் கிடைத்த வெற்றிபோல இந்த விவகாரத்திலும் வெற்றி கிடைக்கும் என ரொம்பவும் நம்பிக்கையா இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

