மந்தனா மிரட்டல் சதம்: ஆஸியுடன் 2வது ஓடிஐ இந்தியா மகளிர் அமர்க்கள வெற்றி
சண்டீகர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மகளிர் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 102 ரன் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடிய நிலையில், சண்டீகரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் ஆடத் துவங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தனர்.
ஆஷ்லே கார்ட்னர் வீசிய 12வது ஓவரில் பிரதிகா (25 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த ஹர்லீன் தியோல் 10 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 17 ரன்னிலும் சிறிது நேர இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். விக்கெட்டுகள் அவ்வப்போது விழுந்தபோதும், மற்றொரு துவக்க வீராங்கனை மந்தனா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 91 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 117 ரன் விளாசிய அவர், தஹிலா மெக்ராத் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 49.5 ஓவரில் இந்தியா 292 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.
அதையடுத்து, 293 ரன் வெற்றி இலக்குடன் ஆஸி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் துல்லியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் ஆலிஸா ஹீலி (9 ரன்), ஜார்ஜியா வால் (0 ரன்), பெத் மூனி (18 ரன்), எலிசெ பெரி (44 ரன்), அன்னபெல் சதர்லேண்ட் (45 ரன்), ஆஷ்லே கார்ட்னர் (17 ரன்) சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 40.5 ஓவரில் ஆஸி, 190 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், இந்தியா 102 ரன் வித்தியாசத்தில் அமர்க்கள வெற்றியை பதிவு செய்து தொடரை, 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய தரப்பில், கிரந்தி கவுடா 3, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.