திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நாளை மறுதினம்(17ம் தேதி முதல்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தீபாராதனைக்கு பின்னர் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத்தும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் (17ம் தேதி) முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் இந்த புதிய மேல்சாந்திகள் தான் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றுடன் 41 நாள் மண்டல காலம் நிறைவடையும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடங்கியது. நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை 16 நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் கூறியது: சபரிமலையில் மண்டல காலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. மொத்தம் 6 கட்டங்களாக 18,741 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நிலக்கல், பம்பை, சன்னிதானம் என மூன்று மண்டலங்களாக பிரித்து தலா ஒரு எஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில் டிஐஜிகளான அஜீதா பேகம், சதீஷ் பினோ மற்றும் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்ட எஸ்பிக்களான ஆனந்த், சாபு மேத்யூ, சாகுல் அமீது ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
18 மணிநேரம் நடை திறந்திருக்கும்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. அன்று முதல் தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு நடை சாத்தப்படும் நேரம் கூட்டப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
