மாமல்லபுரம்: இந்தியாவின் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக மாமல்லபுரத்தில் உள்ள தலசயனபெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலில் தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீருவதற்கு, தலசயன பெருமாள் மற்றும் நிலமங்கை தாயாரை வழிபட்டு செல்கின்றனர். மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் வழியில், இக்கோயிலுக்கு சொந்தமான புண்டரீக புஷ்கரணி தெப்பகுளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஏராளமான மீன்களும் நீர்கோழிகளும் துள்ளி விளையாடுவதை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசிப்பது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக தொடர் வெப்ப அலை காரணமாக, மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலுக்கு சொந்த புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்தில் உள்ள நீர் வற்றியது. இதனால் கடந்த சில நாட்களாக இக்குளத்தில் இருந்த அனைத்து மீன்களும் செத்து மிதப்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தெப்பக்குளத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூக்கை கர்ச்சீப்பால் மூடியபடி கடந்து செல்ல அவலநிலை நீடிக்கிறது. எனவே, தலசயனபெருமாள் கோயிலின் புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்தில் இறந்து கிடக்கும் மீன்களை உடனடியாக அகற்றி, சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த தெப்பக்குளத்தை வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முறையாக தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

