மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் இருந்து இன்று காலை எம்சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி இசிஆர் சாலை வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (47) என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே கடம்பாடி இசிஆர் சாலை மேம்பாலம் அருகே லாரி வந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காததால் டிரைவர் தேவேந்திரனின் கட்டுப்பாட்டை இழந்து, இசிஆர் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியின் முன்கேபின் பகுதி இடிபாடுகளில் சிக்கி டிரைவர் தேவேந்திரன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கு டாரஸ் லாரியின் முன்பக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த டிரைவர் தேவேந்திரனை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, லாரியின் முன்பக்க பகுதியை உடைத்து, அதன் இடிபாடுகளில் சிக்கியிருந்த டிரைவர் தேவேந்திரனின் சடலத்தை மீட்டனர்.


