கடலில் இருந்து திடீரென கரை ஒதுங்கும் ராட்சத குழாய்கள்: மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் சிறிய படகு மீனவர்கள் தவிப்பு
மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள நெம்மேலி கடற்கரையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பெரிய குழாய்கள் கடல் சீற்றம் காரணமாக திடீரென கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையம் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. திருவான்மியூர், பெருங்குடி மக்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க இது உதவுகிறது.
இந்த நிலையில், கடல் நீரை குடிநீராகும் திட்டத்திற்கு கடலில் நிலைத்நிறுத்தப்பட்டு பயன்படுத்தக்கூடிய ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ராட்சத குழாய் என்பது தெரிய வந்தது. இந்த குழாய்கள் சுமார் 1500 மீட்டர் நீளம் கொண்டவை, குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஜே.சி.பி. உதவியுடன் அவற்றை கரையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர், ஆனால் கடல் சீற்றம் காரணமாக அந்த பணிக்கு சிரமம் ஏற்பட்டது. நெம்மேலி கடற்கரையில் இந்த குழாய்கள் கடலில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு பதிக்கப்பட்டிருந்தன. இக்கருவி மூலம் குடிநீரை குடிநீராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இத்தகைய ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.