Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய வம்சாவளியினருடன் இன்று சந்திப்பு; மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பாதுகாப்பு வர்த்தக உறவில் புதிய திருப்பம்

கோலாலம்பூர்: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார். இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் மலேசியா முக்கிய தூணாக விளங்கி வருகிறது. முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் பொறுப்பேற்ற பிறகு பொருளாதார ரீதியாகவும் பிராந்திய நிலைத்தன்மைக்காகவும் இந்த உறவில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இன்று பிரதமர் மோடி தனது மலேசிய பயணத்தை தொடங்கி அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் பாதுகாப்பு, ராணுவம், பொருளாதார கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, டோர்னியர் ரக விமானங்களை மலேசியாவிற்கு விற்பனை செய்வது மற்றும் இரு நாடுகளும் பயன்படுத்தி வரும் சுகோய்-30 ரக போர் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்புப் பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

‘சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உறவை ஆய்வு செய்வதோடு, செமிகண்டக்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இந்த பயணம் உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் சுமார் 18,000 இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவதுடன், இந்தியா - மலேசியா சிஇஓ அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடுகிறார்.