Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

மலேசியாவில் ஒலித்த எம்ஜிஆர் பாடல்; ‘நாளை நமதே’ பாடலை பாட வைத்த மலேசிய பிரதமர்: நெகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி

கோலாலம்பூர்: இந்திய மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே பல ஆண்டுகளாகவே ஆழமான கலாசார மற்றும் வரலாற்று ரீதியிலான பிணைப்புகள் நீடித்து வருகின்றன. மலேசிய நாட்டில் சுமார் 29 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தமிழ் மொழி ஒரு முக்கிய பாலமாகத் திகழ்கிறது. குறிப்பாக, 1975ம் ஆண்டு வெளியான ‘நாளை நமதே’ உள்ளிட்ட காலத்தால் அழியாத பல திரைப்படப் பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆர் அங்குள்ள தமிழர்களின் இதயங்களில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் போன்ற பல்வேறு துறைகளில் ‘ஒன்றிய அரசு’ உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி மலேசியாவிற்கு வருகை தந்துள்ளார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற சிறப்பு மதிய விருந்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் விதமாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் புகழ்பெற்ற ‘நாளை நமதே’ பாடலை பாட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த உன்னத நிகழ்வு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‘எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், எம்.ஜி.ஆர் நடித்த நாளை நமதே என்ற பாடலும் பாடப்பட்டது; இந்தியாவில் உள்ள பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த விருந்து நிகழ்ச்சியில், தமிழ் கலாசாரம் மற்றும் சினிமா பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பிணைப்பு உலகத்தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.