Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?

*பிரதான சாலையை விட பயண தூரம் குறைவு

*நீண்ட காலமாக காத்திருக்கும் விவசாயிகள்

வருசநாடு : மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியம் தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் கிராமத்தை இணைக்கும் மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து - மல்லபுரம் இடையே புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், ஏழுமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலை வழியாக செல்லுவதை விட மலைச்சாலையை பயன்படுத்தினால் பயணம் தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர்.

மேலும் காலை, மாலை நேரங்களில் மலைச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை வழியாக போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது.

இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து - மல்லப்புரம் இடையே அரசு மினி பஸ் சேவையும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மலைச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அதன்காரணமாக செடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையின் அளவு குறுக தொடங்கியது. மேலும் கனமழையால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து 10 ஆண்களுக்கு மேல் பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தால் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்தது. மேலும் சாலை குறுகியதால் ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த மலைச்சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகி செல்லும் போது சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே விபத்து அச்சத்தால் பெரும்பாலன வாகன ஓட்டிகள் மலைச்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது மலைச்சாலை வழியாக பைக்குகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

8 கிமீ தொலைவுடைய மலைச்சாலையில் தேனி மாவட்ட எல்லை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட கட்டுபாட்டில் உள்ள மீதமுள்ள 7 கிமீ தொலைவு சாலை தொடர்ந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து முத்தாலம்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கனி கூறுகையில், ‘‘கல்லுப்பட்டி. மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலை வழியாக சென்றால் 70 கிமீ தொலைவு செல்ல வேண்டும். ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தினால் 20 கிமீ தொலைவில் கிராமங்களுக்கு சென்று விடலாம்.

தற்போது சாலை அதிக சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்பட்டாலும் பயண நேரம் மற்றும் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு பெரும்பாலும் மலைச்சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இரண்டு மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா கூறுகையில், ‘‘மல்லப்புரம் மலைச்சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு அதில் பஸ் வசதி ஏற்படுத்திய பின்பு முத்தாலம்பாறை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்டம் மல்லப்புரம் பகுதியில் நிலங்களை வாங்கி விவசாயத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதே போல மல்லப்புரம் பகுதி பொதுமக்கள் தாழையூத்து பகுதியில் விவசாய நிலங்கள் வாங்கினர். சாலை நல்ல நிலையில் இருந்து அதில் அதிக போக்குவரத்து நடைபெற்று வந்த சமயம் விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வரவும் விளை பொருட்களை ஏற்றி வரவும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது சாலை சேதமடைந்து போக்குவரத்து குறைந்த பின்பு தோட்டங்களுக்கு செல்ல ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்காக நீண்ட நேரம் சாலையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

மேலும் ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்து விளைபொருட்களை ஏற்றி செல்ல வேண்டிய சூழலும் உள்ளது. இதற்கு தேனி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், இந்த மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.