Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கனவுகளை நிஜமாக்குங்கள்!

முடியும் என்று ஒத்துக்கொண்டதாலேயே உலகில் பல அதிசயங்கள் நடந்திருக்கின்றன. காற்றைக் கையில் பிடிப்பதா? இது உங்களுக்கு வேடிக்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் முடியும் என்று ஒத்துக்கொண்டதால் தான் காற்றிலிருந்து காற்றாலை மூலம் மின்சாரம்தயாரிக்க முடிந்தது. முடியும் என்று நம்புபவர்களுக்கு தான் வானமும் வசப்படும். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தான் வேறு எந்தச் செயலையும் விட முக்கியமானது என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.

முயற்சி என்பது விளக்கில் எரிகின்ற திரியைப் போன்றது. நம்மிடம் உழைப்பு, திறமை எல்லாம் இருந்தாலும் திரியை முயற்சியால் தீண்டவில்லை எனில் ஒளி கிடைக்குமா? நம் இலட்சிய வேட்கையை மேலும் பயன்படுத்துவதற்கும் இலக்கின் தூரத்தைக் கடப்பதற்கும் எடுத்து வைக்கும் அடியாகும் முயற்சி.

தோல்வி என்பது ஒரு அனுபவப்பாடம், தோல்விதான் நம்மை வெற்றியடைய தயார் செய்கிறது. தோல்வி வந்துவிட்டால் மனம் கலங்குவதை விட தோல்வியை கொண்டாடக் கற்றுக்கொண்டால் ஆரவாரத்தோடு வெற்றி நம்மை அரவணைக்கும். உங்கள் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிகிறது என்று வருந்தாதீர்கள். அதுவே ஒரு புதிய வெற்றியைத் தரலாம். தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிராம்பெல்லிற்கு காது கேட்காது. முதலில் அவர் காது கேட்கும் கருவியைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அது வெற்றி அளிக்கவில்லை. அதற்கு மாறாக நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொலைபேசியை கண்டுபிடித்தார்.

உலகம் இந்தியாவைப் பார்த்து முதல் முறையாக மிரண்டது. அக்னி ஏவுகணை ஆகாயத்தை கிழித்தபோது, உலகம் இந்தியாவை மரியாதையுடன் பார்த்தது, பொக்ரானில் ஒரு பேரொலி கேட்டபோது, இந்த வெற்றிகளின் பிறப்பிடம் தான் அப்துல் கலாம். அவரால் எப்படி இந்தச் சாதனை சாத்தியமாயிற்று.

இந்த இடத்தில் ஒன்றை உங்களுக்கு பதிவு செய்தாக வேண்டும்.படித்து முடித்தவுடன் அவருக்கு வேலை கிடைத்திருக்கும். அதனால் அவர் உயரத்துக்குச் சென்று இருக்கிறார் என்றுதான் உங்களது மனம் நினைத்திருக்கும். என்ன நடந்தது தெரியுமா? அதையும் அவர் தன்னுடைய அக்னி சிறகுகள் நூலிலே பதிவு செய்திருக்கின்றார்.

ஒரு நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்து,நேர்காணலில் கலந்து கொண்டார். டெஹராடூனில் நடைபெற்ற மிக கடுமையான நேர்முகத் தேர்வு அது. உடல் அறிவுத்திறன் போன்ற அம்சங்கள் அப்போட்டியில் சோதித்தார்கள். பன்னிரண்டு பேர் போட்டியாளர்கள் இதில் 11 பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இதில் நீக்கப்பட்ட அந்த துரதிஸ்டசாலியாக இருந்தது நான் தான் என்கிறார் அப்துல் கலாம். இவருக்கு இந்தச் சோதனையா என்று நீங்களும் வியப்படை

கின்றீரகளா தேர்வில் தோற்றுப் போன அவர் வானத்தில் வலம் வந்தது எப்படி? சிந்திய வியர்வையும், ஆற்றலும் தான் அவரது தோல்வி மனப்பான்மையை தோற்கடிக்க செய்து வான வீதியில் வலம் வரச் செய்தது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு மிகப்பெரிய சாதனைகளை செய்து முடித்தவர். மண்ணில் கால் பதித்து விண்ணில் தன் புகழை வாழும்போதே தொடச் செய்த அந்த மாமனிதர் அப்துல் கலாம், அவர்இளைஞர்களுக்கு சொன்னது என்னவென்றால் கனவு காணுங்கள்! அந்த கனவு தூக்கத்தில் காண்பது அல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்ய வேண்டும், அத்தகைய கனவை காண வேண்டும் என்றார். அதன் மூலம் பல இளைய சமூகத்தினரை கனவு காணச் செய்தவர். அப்படி கனவு கண்டு அந்த கனவை நிஜமாக்கியவர்கள் பலர், உதாரணத்திற்கு இந்த சாதனை பெண்மணியையும் சொல்லலாம்.

பள்ளி பருவத்தில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். யுகேஜி படிக்கும் போதே நான் கலெக்டர் ஆக வேண்டும் என கூறியவர், அதையே இலக்காக கொண்டு 28 வயதில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டி உள்ளார்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது பலரின் நெடுநாள் கனவாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இத்தேர்வை எழுத வருகிறார்கள். ஒரு முறை, இரண்டு முறை முயற்சி செய்து விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்பவர்களும் உண்டு. ஆனால், பல தோல்விகளை கடந்து சிலரால் மட்டுமே வெற்றியைப் பெற முடிகிறது.அந்த வகையில், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துக் காட்டியவர் மோனிகா ஐஏஎஸ்.யுகேஜியில் தொடங்கி காட்டியவர் மோனிகா ஐஏஎஸ். யுகேஜி-யில் தொடங்கிய பயணம் எப்படி ஐஏஎஸ் வரை சென்றது என்ற உத்வேகமளிக்கும் வெற்றிக் கதையை பார்க்கலாம்.

சென்னையை சேர்ந்தவர் மோனிகா.இவரின் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெறும்போது இவரின் வயது 28. இந்த கனவு எப்படி தொடங்கியது என அவரிடம் கேள்வி கேட்டால், சிறுகுழந்தையாக இருக்கும் போதே தொடங்கியது என்கிறார். ஆம், இவர் யுகேஜி படிக்கும்போது பள்ளியில் நடைபெற்ற நாடகத்தில் கலெக்டர் வேடத்தை இவருக்கு தரவில்லை. இந்த சம்பவத்தை வீட்டில் சொல்லியுள்ளார். வேடம் எதற்கு உண்மையான கலெக்டராகவே ஆகிடலாம் என இவரின் பெற்றோர்கள் சமாதானம் செய்துள்ளனர்.

அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து வந்த இவர்,ஐஏஎஸ் என கனவுடனே இருந்தார். 10-ம் வகுப்பில் 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு பள்ளியில் வணிகத்துறையை தேர்வு செய்து படித்தார். சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை பார்த்து கவரப்பட்டு,அவர்களைப் போலவே நிச்சயம் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என மனதில் ஆழமான கனவை ஏற்படுத்திக் கொண்டார்.

கல்லூரியிலும் வணிகம் சார்ந்து படித்த இவர் பி.காம் பட்டம் பெற்றார்.பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் தகுதிப் பெற்றார்.சிஏ தேர்வு என்பது பல கட்டமாக நடைபெறும் மிகக் கடினமான தேர்வாகும்.இதில் தேர்ச்சி பெற்ற பின்னர், வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.தொடர்ந்து, கரூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே 2022-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி படிக்க தொடங்கினார்.முழு நேர பணியாளராக இருக்கும்போதே முதல் முறை தேர்வை எழுதினார். அதில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.இரண்டாம் முறை எழுதினார் அதிலும் தேர்ச்சி பெறவில்லை.படிப்பதில் முழு கவனம் செலுத்த விரும்பிய இவர், பணியை ராஜினாமா செய்தார்.

பொருளாதார ரீதியாக பெரியளவில் ஆதரவில்லாமல் இருக்கும் நேரத்தில் 2023-ம் ஆண்டு நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பயிற்சிக்கான நுழைவுத் தேர்விலேயே தகுதி பெற முடியவில்லை என்று நினைக்கமால், அதை ஒரு ஊக்கமாக எடுத்துகொண்டு,மேலும் நன்கு படித்தார். 2024-ம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு தேர்ச்சி பெற்றார். முதன்மைத் தேர்விற்கான பயிற்சியில் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்தார். முதன்மை மற்றும் நேர்காணல் வரை சென்றார். இதனிடையே 2025-ம் ஆண்டுக்கான தேர்விற்கான பயிற்சி நுழைவுத் தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றார்.

2025-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதி முடிவுகள் வெளியானது. சென்னையில் அரசு உதவித்தொகையுடன் அரசுத்துறையில் பயிற்சி பெற்ற மோனிகா, அகில இந்திய அளவில் 39வது இடமும், தமிழ்நாட்டில் 4வது இடமும் பெற்று அசத்திக் காட்டினார்.

சில சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்த அவர்,நேர்காணலில் இசை பற்றி அவரிடம் கேள்விக் கேட்கப்பட்டதாக பேட்டியில் கூறினார். சாதாரண குடும்பத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என உணர்வுடன் படிப்பவர்களுக்கு மோனிகா எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ் பதவிக்கு தேர்வாகி அவரின் நீண்டக்கால கனவை நிஜமாக்கி உள்ளார். இவரின் வெற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் உன்னத பாடமாகும்.