Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியன் வங்கியில் பயங்கர தீ விபத்து: கணினிகள், ஆவணங்கள் எரிந்து சேதம்

தஞ்சை: தஞ்சை அருகே இந்தியன் வங்கியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானது. அதே சமயம் பல கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள், ரொக்கம் தப்பியது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள தத்துவாஞ்சேரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் இரவு 10 மணி அளவில் வங்கியிலிருந்து புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வங்கி மேலாளர் மற்றும் தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 2 கணினிகள், பழைய ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானது. ஆவணங்கள் உள்ள பகுதியில் மட்டுமே தீப்பிடித்ததால் லாக்கர் அறை தப்பியது. இதனால் லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள், மற்றும் ரொக்க பணம் தப்பியது. வங்கியில் தீ விபத்து பற்றிய தகவல் பரவியதும் நகைகளை அடமானம் வைத்துள்ளவர்கள், லாக்கரில் நகைகள், ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் வங்கி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.