Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓய்வுபெற்ற வருவாய்துறை பெண் அதிகாரி வீட்டில் 44 சவரன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் திருடிய பணிப்பெண் கைது: ரூ.25 லட்சம் கடன் நெருக்கடியால் கைவரிசை காட்டியதாக வாக்குமூலம்

சென்னை: மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற வருவாய்துறை பெண் அதிகாரி வீட்டில் 44 சவரன் நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் திருடிய பணிப்பெண்ணை புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் பத்மா(85). வருவாய் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது கணவர் வெங்கட கோபால் இறந்துவிட்டார். தற்போது பத்மா தனது மகள் சுஜாதாவுடன்(53) வசித்து வருகிறார். மகள் சுஜாதா கணவரை பிரிந்த நிலையில் வங்கியில் பணியாற்றி வருகிறார். வயது மூப்பு காரணமாக பத்மா வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக மந்தைவெளியை சேர்ந்த மணிமேகலை(53) என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். நம்பிக்கையின் பேரில் மணிமேகலை பத்மா வீட்டில் அனைத்து அறைகளுக்கும் சென்று வருவார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த ட்ரங்க் பெட்டி திடீரென மாயமாகியது. அந்த பெட்டியில் பத்மா 44 சவரன் தங்க நகைகள் ரூ.15.46 லட்சம் ரொக்கம் பணம் வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் பத்மா வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது வீட்டில் பணியாற்றும் மணிமேகலை ட்ரங்க் பெட்டியை தூக்கி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் பணிப்பெண் மணிமேகலை வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது, அவரது வீட்டில் நகை மற்றும் பணம் வைத்திருந்த ட்ரங்க் பெட்டியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மணிமேகலையை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றதற்காகவும், தனது கணவரின் மருத்துவ செலவுக்கு என மொத்தம் ரூ.24 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்ததால், பத்மா மற்றும் அவரது மகள் சுஜாதா ஆகியோர் வயதானவர்கள் தானே, அவர்களுக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லாததால், அறையில் வைத்திருந்த ட்ரங்க் பெட்டியை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

அதைதொடர்ந்து போலீசார் மணிமேகலையிடம் இருந்து 44 சவரன் நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.