சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பாஜ தவறான முறையில் பயன்படுத்துகிறது. இந்த நாடு அதானி, அம்பானிக்காக இருக்கிறதா? ஒன்றிய பாஜ அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை. நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் ஒன்றிய பாஜ அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலம் இன்று நல்லமுறையில் முன்னேறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், விஜயன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர் டெல்லி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.


