Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் 3வது நாளாக நீடிக்கும் மழை; நிலச்சரிவால் மும்பை - கோவா சாலை முடங்கியது: இதுவரை 13 பேர் பலி; ஆரஞ்சு எச்சரிக்கை

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 13 பேர் பலியான நிலையில் மூன்றாவது நாளாக மழை நீடிப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால் மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில் 380 மில்லிமீட்டர் மழையும், மேற்கு புறநகர் பகுதியில் 345 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி பெரும் வெள்ளக்காடாக மாறியதுடன், பல்வேறு மழைக்கால விபத்துகளில் சிக்கி 13 பேர் பலியாகினர்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த கனமழையின் காரணமாக நகோதனே பகுதிக்கு அருகிலுள்ள மும்பை - கோவா நெடுஞ்சாலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் கார்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. தற்போது பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்தேரி சுரங்கப்பாதை, தாதர் போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத பம்புகள் மூலம் அகற்றி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில், நிலச்சரிவால் மூடப்பட்டிருந்த மும்பை - புனே விரைவுச்சாலை தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.