கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராகவில்லை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சகாயம் சாட்சியம் அளிக்கலாம்: மீண்டும் சம்மன் அனுப்ப மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல்லாயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2011ல் அப்போதைய கலெக்டர் சகாயம் அறிக்கை அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்குகளின் விசாரணை மதுரையிலுள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சியம் அளிக்க சகாயம் ஆஜராகாமல், கனிம வள நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரைக்கு சென்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில் கனிம வள சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘ஏன் சகாயம் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கிறார். அவருக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது? சாட்சியம் அளிக்க அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையென்றால் நீதிமன்றம் உத்தரவாக பிறப்பிக்க தயாராக உள்ளது’’ எனக்கூறி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
பிற்பகலில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி, மதுரை எஸ்பிக்கு சகாயம் எழுதிய கடிதத்தை தாக்கல் செய்தார். மேலும் வீடியோ கான்பரன்சில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெறவில்லை. வழக்கில் சாட்சியம் அளிக்க அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என ஏற்கனவே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘நான் வரும் செப். 18 முதல் மருத்துவ விடுப்பில் செல்கிறேன். எனவே, சகாயம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ெசன்னை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டும். சகாயத்திற்கு தேவையான பாதுகாப்பு தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு சகாயத்திற்கு புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6க்கு தள்ளி வைத்தார்.
