மதுரை வண்டியூர் கண்மாயில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் நவீன மிதவை நடைபாதை படகு குழாம்: 85 சதவீதம் பணிகள் நிறைவு
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயில் நடைபெற்று வரும் நவீன மிதவை நடைபாதை படகு குழாம் உள்ளிட்ட பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து, ஜனவரியில் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. மதுரையில் 550 ஏக்கர் பரப்பளவில் வண்டியூர் கண்மாய் அமைந்துள்ளது. இதன் கரையோர பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றி வருகிறது. கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேற்புறம், வடபுறம் கரையோரத்தில் 3 கி.மீ. தூரம் நடைபயிற்சி பாதை, மதுரையிலேயே முதன் முறையாக 3 கி.மீ. தூரத்திற்கு சைக்கிள் டிராக் எனும் மிதிவண்டிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தியானம், யோகா வளாகம், திறந்தவெளி சந்திப்பு அரங்கம், சிறுவர்களுக்கான சறுக்கு, ஊஞ்சல் வசதி, 3 இடங்களில் கழிவறை, நீரூற்றுகள், மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் விதவிதமான பூக்கள், மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் நடும் பணி உள்ளிட்ட பணிகள் வேகமடைந்துள்ளன. கண்மாய் வரத்து கால்வாயில் 4 சிறு பாலங்கள், இரண்டு இடங்களில் பிரமாண்ட பூங்கா நுழைவு வாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாயில்களில் அரிய பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. 14 சிறு அறைகள், கேமராக்கள், சிறுநூலகம், ஆம்பி தியேட்டர், செஸ் உள்விளையாட்டரங்குகள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்மாய்க்குள் கழிவுநீர் கலக்காதிருக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி 75 சதவீத நிறைவடைந்துள்ளது. மேலும், கண்மாயில் நவீன தொழில் நுட்பத்தில் ‘மிதவை நடைபாதையுடன் படகு குழாம்’ அமைக்கப்பட்டு வருகிறது. காற்று நிரப்பிய பைபர் குடுவைகளுடனான ‘பிலோட்டிங் செட்டி’ என்ற நவீன தொழில்நுட்ப அமைப்பில் இந்த மிதவை நடைபாதை அமைக்கப்படுகிறது.
கொடைக்கானல், கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் அமைக்கப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பில் படகுகள் இயக்கப்படும். இதுகுறித்து மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் அமர்தீப் கூறுகையில், ‘இந்த நவீன மிதவை நடைபாதை 500 சதுர மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிவிலிருந்து கன்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு, தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இவை அமைக்கப்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாய் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அனைத்து இடங்களிலும் என மொத்தம் 750 விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. வரும் ஜனவரியில் திறப்பு விழா நடத்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன’ என்றார்.