மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம் நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை: 3 நாட்களில் பேர் கொலையால் மக்கள் பீதி
மதுரை: மதுரையில் நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. கடந்த 3 நாட்களில் ரவுடி உள்பட 3 பேர் ஹாட்ரிக் கொலை செய்யப்பட்டது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, சிந்தாமணி கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (31). கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ளார். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணைக்காக நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்ற விசாரணை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் டூவீலரில் அவரை பின்தொடர்ந்தது. நீதிமன்றத்தின் வெளியில் இருந்து முருகனை பின்தொடர்ந்த கும்பல் இடையில் அவரை கொலை செய்ய முயற்சி செய்தது. ஆனால், தொடர் போக்குவரத்து மற்றும் சரியான இடம் அமையாததால் முருகனை சுற்றிவளைக்க முடியவில்லை.
இதற்கிடையே, முருகன் தனது வீட்டிற்கு அருகே வந்ததால், இதற்கு மேல் காத்திருக்க முடியாது என நினைத்த அந்த கும்பல் டூவீலரில் இருந்து இறங்கி அரிவாள் மற்றும் பயங்கர வாளுடன் அவரை விரட்டியது. தன்னை கொலை செய்ய விரட்டுகிறார்கள் என அறிந்த முருகன், தனது வீட்டிற்குள் சென்று மறைந்து கொள்ளலாம் என்ற நினைத்து வேகமாக வீட்டை நோக்கி ஓடினார். ஆனால், அந்தக் கும்பல், அவரை ஓட, ஓட விரட்டி வீட்டின் அருகில் வைத்து சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
முருகன் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்து விரைந்து வந்த சிந்தாமணி போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை வழக்கு குற்றவாளியான முருகன், நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* மூன்று நாளில் 3 கொலைகள்
சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் மணி (எ) கிரைம் மணி (30). இவர் மீது மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவருடைய நண்பர் திவாகர் (30). இருவரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். மதுபோதையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரமடைந்த திவாகர், அங்கு கிடந்த கல்லை எடுத்து மணியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரை தேடி வருகின்றனர். இந்த இரு கொலைகளுக்கும் முன்னதாக மதுரை கூடல் புதூர் செல்லையா நகரை சேர்ந்த ஷிரிப்பிக்ராஜன் (22) கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப் பட்டார்.
இது தொடர்பாக தனியார் நிதிநிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணி செய்து விக்னேஷ் (24), மகேஷ் (25), ஆனந்த் (25) ஆகியோரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இப்படி மதுரையில் 3 நாட்களில் ரவுடி, சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட 3 பேர் அடுத்தடுத்து ஹாட்ரிக் வரிசையாக கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


