Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டலத்தில் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பை 15 - 30% வரை உயர்த்தி பத்திரப்பதிவு: பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் குற்றச்சாட்டு

சென்னை: மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டலத்தில் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி பத்திரப்பதிவு செய்யப்படுவதாக பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை மூலம் நிலம் விற்பனை, குத்தகை ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் மக்களிடம் சூலிக்கப்படுகிறது.

இதில், நிலத்துக்கான மதிப்பு, பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் இருக்க வேண்டும். பத்திரப்பதிவு துறை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தம் செய்யப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனைத்து வகையான நிலங்களின் பத்திர பதிவிற்கு வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படும் என சார் பதிவாளர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக பத்திர எழுத்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நில ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் கூறியதாவது: நிலம் உள்ள பகுதி மற்றும் சர்வே எண்ணை குறிப்பிட்டால் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு இணையத்தில் பொதுவெளியில் உள்ளது. ஆனால் வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் கூடுதலாக குறிப்பிட்டால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என சார் பதிவாளர் கூறுகிறார். இதனால் கட்டணத் தொகை அதிகரிப்பதுடன் மக்களிடம் பிரச்னை ஏற்படுகிறது. கூடுதல் பணம் கேட்டால் எழுத்தர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் தினசரி சராசரியாக 35 பத்திரப்பதிவுகள் நடைபெறும் ராஜபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த இரு நாட்களாக பத்திர பதிவு வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூன் 30 முதல் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆனால் இது குறித்து சார்பதிவாளரிடம் கேட்ட போது, பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கேட்பதில்லை என்றார். ஆனால் பதிவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது மதுரை மண்டல டிஐஜி ஆனந்த் (கூடுதல் பொறுப்பாக ராமநாதபுரம் மண்டலம்) வழிகாட்டு மதிப்பை கூடுதலாக 15 சதவீதத்திற்கு மேல் உயர்த்த மதுரை, ராமநாதபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் கடைபிடிக்க கட்டாயபடுத்துகிறார் என தெரிவிக்கின்றனர்.