Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை சித்திரை திருவிழா; விடிய, விடிய தசாவதாரத்தில் அருள்பாலித்த அழகர்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம் என தசாவதாரங்களில் அழகர் அருள்பாலிக்கும் நிகழ்வு நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்து பரவசமடைந்தனர். மதுரை மாவட்டம், அழகர்கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10ம் தேதி தங்கப்பல்லக்கில் அழகர், மதுரை புறப்பட்டு வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் மதுரை வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு இரவு 11 மணியளவில் சென்றார். அங்கு நேற்று காலை அழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடந்தது. பின்னர் ஏகாந்த சேவையில் எழுந்தருளிய அழகர், வீரராகவ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப்பெருமாள், திருக்கோலத்தில் புறப்பாடாகிய அழகர், வண்டியூர் பகுதி வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டகபடியில் எழுந்தருளினார். அங்கு நாரைக்கு முக்தி அளித்தலும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து, தேனூர் மண்டகப்படியை வலம் வந்த அழகர், அங்கிருந்து புறப்பாடாகியபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர். மாலையில் அனுமார் கோயிலில் அழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது. பின் மேளதாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு புறப்பட்டார். அந்த மண்டபத்தில் இரவு 10 மணிக்கு தொடங்கி விடிய, விடிய தசாவதாராம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட தசாவதாரங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இன்று காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதியுலா வந்த அழகர், பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நாளை அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். 16ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10 மணிக்கு மேல் இருப்பிடம் சென்றடைகிறார். 17ம் தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.